விசிக 5 மாநிலங்களில் போட்டி – தொல்.திருமாவளவன்!

Spread the love

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளதால், பொதுச்சின்னமாக பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கா அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தங்களுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்து வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலின் போது சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். தொடர்ந்து சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பானை சின்னத்தில் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். அதன் பிறகுச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 5 மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடுகிறது. எனவே, எங்களுக்கு பானை சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழுவின் தலைவரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம். ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ அதிபர் ஆட்சிக்கு வழிவகுக்கும். அது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்பதால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்க உள்ளோம்” என்றார்.

மேலும், “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒரே சின்னம் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிச்சயம் அங்கீகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இருப்பினும் சமீப காலமாக அரசியல் கட்சிகளில் ஏற்படும் பிளவுகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நடவடிக்கைகள் அரசியல் தலையீடு உள்ளது போன்ற தோற்றத்தை உருவாக்குவதை மறுக்க முடியாது. இது தொடர்பாக சரத் பவார் கூறி இருக்கும் கருத்து கவனிக்கப்பட வேண்டியது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும். விருப்பு வெறுப்பின்றி செயல்பட வேண்டும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இன்றி செயல்பட வேண்டும்” என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

கூட்டணி கட்சியான திமுக, அவர்களது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நிர்பந்திப்பதாக வெளிவரும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தொல்.திருமாவளவன், ”கடந்த மக்களவைத் தேர்தலின் போது வெற்றி என்பதை குறிக்கோளாக கொண்டிருந்ததால் ஒரே சின்னத்தில் போட்டியிட வேண்டுமென திமுக வலியுறுத்தியது உண்மைதான். அப்போதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தது. சட்டப்பேரவை தேர்தலில் ஆறு தொகுதிகளில் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டோம். வெற்றியும் பெற்றோம். அப்போது வெற்றி என்ற நோக்கிலேயே அந்த கருத்து முன்வைக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை நசுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அத்தகைய கோரிக்கை வைக்கப்படவில்லை. எனவே இப்போதைக்கு அது ஒரு பிரச்சனை அல்ல. விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றுதான் விரும்புகிறது” என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours