மக்களவைத் தேர்தலில் புதுவை மற்றும் தமிழகத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 40 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.
மக்களவைத் தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 இடங்களிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிட கரும்பு விவசாயி சின்னத்திற்காக உயர் நீதிமன்றம் வரை சென்றும் கிடைக்கவில்லை. இறுதியில் ஒலிவாங்கி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
இந்நிலையில் நாதக வேட்பாளர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுக்களை கடந்த 2 நாட்களாக தாக்கல் செய்தனர். அதில், விருதுநகர் வேட்பாளர் கவுசிக், திருவள்ளூர் வேட்பாளர் ஜெகதீஸ் சுந்தர் இருவரும் வேட்புமனு தாக்கலின்போது உறுதிமொழி படிவத்தை படிக்கச் சொன்னபோது, தங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியாது என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்தையும் பெற்றது.
இந்நிலையில், இன்று மக்களவைத் தேர்தல் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அதில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் விளவங்காடு இடைத்தேர்தல் வேட்பாளரின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டன. எந்த பிரச்சினையுமின்றி 41 வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டது, நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours