அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டு நாட்கள் நேர்காணல் நடத்தப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட 2,475 பேர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அளித்தனர். இந்நிலையில் விருப்ப மனுக்களை அளித்தவர்களிடம் 2 நாட்கள் நேர்காணல் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. அதன்படி, வருகின்ற 10 மற்றும் 11 ஆம் தேதி காலை 9.30 மணி மற்றும் பிற்பகல் 2 மணிக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது. 10 ஆம் தேதி காலை திருவள்ளூர், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கும், பிற்பகலில் திருவண்ணாமலை, ஆரணி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கும் நேர் காணல் நடக்கிறது.
இதையடுத்து, 11 ஆம் தேதி பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், புதுச்சேரி உள்ளிட்ட 20 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் காலை, மாலை நேர்காணல் நடத்தப்படும் எனவும் அதிமுக அறிவித்துள்ளது. மேலும் விருப்ப மனு பெற்றதற்கான அசல் கட்டண ரசீதுடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
இதனிடையே, அதிமுக கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக, தொகுதிப் பங்கீடு குறித்த 2 ஆவது கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. இதே போல, பாமகவுடனான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours