திமுக கூட்டணியில் இருந்துகூட யார் வேண்டுமானாலும் வரலாம்…அண்ணாமலை !

Spread the love

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “மோடி தலைமையை ஏற்று யார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தாலும் எங்கள் கதவுகள் திறந்தே இருக்கும் என்று அமித் ஷா தெளிவாக கூறியுள்ளார். மற்றபடி, எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அமித் ஷா சொன்னபடி கூட்டணி கதவு எல்லோருக்கும் திறந்து இருக்கிறது. ஏன், திமுக கூட்டணியில் இருந்துகூட யார் வேண்டுமானாலும் வரலாம். எத்தனையோ கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் யாரையும் வற்புறுத்தப் போவதில்லை. கூட்டணிக்கு வருவதும் வராமல் இருப்பதும் அந்தந்த கட்சிகளின் விருப்பம். எனவே, அமித் ஷா பேசியதை ட்விஸ்ட் செய்ய வேண்டாம்.

2024 தேர்தல் களம் வித்தியாசமானது. இதற்கு முன்பு இது போல் தேர்தல் களம் கிடையாது. 2024 தேர்தலில் அனைத்தும் மாறும். கூட்டணியை பொறுத்தவரை தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. தமிழ்நாட்டின் அரசியல் சூழல்படி, கடைசி நேரத்தில் கூட கூட்டணி அமையலாம். இம்மாத இறுதிக்குள் கூட்டணி குறித்து தெளிவான முடிவு கிடைக்கும். மோடி தான் மீண்டும் பிரதமராக வரப்போகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, கூட்டணிக்கு யாரையும் கட்டாயப்படுத்தி இழுக்கப்போவதில்லை. மோடி மற்றும் பாஜக தலைமையை ஏற்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம். ” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த ஊடகப் பேட்டி ஒன்றில், “தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி தொடர்பான ஆலோசனைகளை நடைபெற்றுவருகின்றன. கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது. தமிழ்நாடு ஒரு முக்கியமான மாநிலம். தேர்தல் அறிக்கையில் தமிழகம் சார்ந்த நிறைய அறிவிப்புகள் இருக்கும்” எனக் கூறியுள்ளார். அமைச்சர் அமித் ஷாவின் இந்தக் கருத்து தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி இன்னும் பட்டுப்போய்விடவில்லை என்பதை உணர்த்துவதுபோல் இருப்பதாக கருத்துகள் எழத் தொடங்கியுள்ளன.

அமைச்சர் அமித் ஷாவின் இந்தக் கருத்து குறித்து முன்னாள் முதல்வரும் மூத்த அரசியல்வாதியுமான ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், “தேர்தல் கூட்டணி கதவு இன்னும் திறந்தே இருக்கிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லியிருப்பது அவருடைய நல்ல மனதைக் காட்டுகிறது. பாஜகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது தொடர்பாக விரைவில் அறிவிப்பேன்” என்றார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (பிப்.7) காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தபோது, “அதிமுகவுக்காக கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று அமித் ஷா சொல்லியிருப்பதன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அதேபோல் அதிமுக – பாமகவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் மூலம் தமிழகத்தில் அக்கட்சி பலவீனமடைந்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. திமுகவின் பலமான கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட இங்கே யாருமில்லை” என்றார்.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், “பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்பது அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் முடிவு. பாஜகவுக்கான கதவு சாத்தப்பட்டுவிட்டது. முன்வைத்த காலை பின்வைக்கப் போவதில்லை” என்று கூறினார். இவ்வாறாக அமித் ஷாவின் ஒரு கருத்து பல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இன்னும் பார்க்கவில்லை.. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அமித் ஷா தெரிவித்த கருத்துகளை இன்னும் நான் பார்க்கவில்லை. பார்த்தால் சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours