இன்டேன் சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவு சேவை இந்தியில் கிடைத்தது தொழில்நுட்ப கோளாறு என்று இந்தியன் ஆயில் நிறுவனம் கூறிய பதிலுக்கு, பாஜக ஆட்சியில் தொழில்நுட்பத் தடங்கல் கூட இந்திக்கு சாதகமாக அமைவது வியப்புதான் என்று சு.வெங்கடேசன், எம்.பி தெரிவித்துள்ளார்.
இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதற்கான சேவையில் தமிழ், ஆங்கில போன்ற மாநில மொழிகள் நீக்கப்பட்டு, இந்தியில் மட்டுமே கிடைத்தது. இதனை கண்டித்து சு.வெங்கடேசன் எம்.பி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிக்கு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனம், இந்த பிரச்சினைக்கு வெற்றிகரமாக தீர்வு காணப்பட்டுவிட்டது என்று பதில் தெரிவித்துள்ளது. அந்த பதிலில், நவம்பர் 1 முதல் ஏர்டெல்லிருந்து ஜியோவிற்கு மாறியதால் எங்கள் இன்டர்ஆக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் சிஸ்டத்தில் மாநில மொழி தேர்வு வசதியில் சிறு தடங்கல் ஏற்பட்டது.
இந்த தற்காலிக மாற்றத்தினால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தேர்வுகளை மட்டுமே நீங்கள் பெற முடிந்தது. இது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த பிரச்சினைக்கு வெற்றிகரமாக தீர்வு காணப்பட்டுவிட்டது. எங்களது ஐவிஆர்எஸ் சிஸ்டத்தின் மூலம் இப்போது தானாகவே மாநில மொழிகள் மற்றும் விருப்பமான மொழித்தேர்வு அமைப்புகளுடன் கூடிய வசதியை வாடிக்கையாளர்கள் தடையின்றி பெறலாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கடிதத்தை குறிப்பிட்டு சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில், “சமையல் எரிவாயு முன்பதிவில் இந்தி. தவறு சரிசெய்யப்பட்டு தமிழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எனது கடிதத்திற்கு பதில். வருத்தம் தெரிவித்து ஐஓசி அறிக்கை. பாஜக ஆட்சியில் தொழில் நுட்பத் தடங்கல் கூட இந்திக்கு சாதகமாக அமைவது வியப்புதான். இந்தி தடங்கல் நீக்கப்பட்டது மட்டற்ற மகிழ்ச்சி.” என்று பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours