தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் திருச்சியில் தனது முதல் பிரச்சார கூட்டத்தை துவக்கினார். அதேபோல் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தனது முதல் பிரச்சார பொதுக்கூட்டத்தை திருச்சியில் இருந்து துவக்கியதோடு 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி தீவிர பிரச்சாரம் செய்தார்.
கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்; 40 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும், அதற்கு கட்சினர் தீவிரமாக பாடுபட வேண்டும், எறும்பை போல, தேனீக்களை போல சுறுசுறுப்பாக செயல்பட்டு, நம் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சி வேட்பாளர்களை, நம்முடைய வேட்பாளராக கருதி வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் 3 அணி போட்டி என்கின்றனர், மக்களுக்கு தெரியும் தேர்தலில் போட்டி என வந்ததுவிட்டால், அது அ.தி.மு.க மற்றும் தி.மு.க.,விற்கு இடையேதான்.
உதயநிதி ஸ்டாலின் 3 ஆண்டுகளாக செங்கல்லை ரோட்டில் காட்டிக் கொண்டுள்ளார். அதை நாடாளுமன்றத்தின் உள்ளே காட்டுங்கள்.
விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தது அ.தி.மு.க அரசு. இல்லை என்று சொல்லும், ஸ்டாலின் என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா?
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தமிழ்நாட்டிற்கு தேவையான உரிமைகளை பெற, நிதியை பெற நாங்கள் பாடுபடுவோம். நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவ – மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரிகளில் 9 இடங்கள் தான் கிடைத்தன. எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கவில்லை. என் மனதில் தோன்றியது. மூத்த அதிகாரிகளை கலந்தாலோசித்து, 7.5% ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன் ஆனால், தி.மு.க அப்படியல்ல. குடும்பத்திற்காக பாடுபடும்.
தி.மு.க ஆட்சியில் போதைப்பொருள் மாநிலமாக தமிழ்நாடு மாறி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தி.மு.க அமைச்சர்களின் ஊழல்களை சேகரித்து வைத்துள்ளேன். 2026-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.
சிறுபான்மையின மக்கள் அச்சப்பட தேவையில்லை. அ.தி.மு.க அவர்களுக்கு துணை நிற்கும். இதை நான் ஓட்டுக்காக சொல்லவில்லை என எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
அ.தி.மு.க பிரச்சார பொதுக்கூட்ட மேடையில், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா, எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி மாநகர, புறநகர மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். இந்த பிரம்மாண்ட கூட்டத்தினால் திருச்சி புறநகர் ஸ்தம்பித்தது.
+ There are no comments
Add yours