38 எம்.பிகள் இருப்பதால் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவற்றை திமுக இப்போதே செய்திருக்காலாமே, ஏன் செய்யவில்லை என இந்திய ஜனநாயக புலிகள் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பி உள்ளார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் சிட்டிங் எம்.பியான கதிர்ஆனந்த்தும், அதிமுக கூட்டணி சார்பில் மருத்துவர் பசுபதியும், பாஜக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சியின் நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகமும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், சுயேச்சையாக வேலூர் மக்களவை தொகுதியில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார்.
இதற்காக அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு, தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வேலூர் பெங்களூரு சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு இன்று காலை சென்ற மன்சூர் அலிகான், அங்கு மீன்களை வாங்க வந்த மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதுடன், விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்த மீன்களை வெட்டி, விலையைக் கூறி விற்பனை செய்தார்.
வேலூர் மீன் மார்க்கெட்டில் மன்சூர் அலிகான் மீன்களின் விலையைக் கூறி விற்பனை செய்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ”பிற கட்சிகளில் உள்ளதை போல் எனக்காக யாரும் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நான் இஸ்லாமிய வாக்குகளை பிரிக்க பாஜக, அதிமுகவுக்கு பீ – டீமாக செயல்படுவதாக சிலர் பொய்யான பிரச்சாரம் செய்து அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். அவ்வாறு நான் யாருக்கும் ஏ – டீமாகவோ அல்லது பீ டீமாகவே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னை பீ டீம் முதல் இசட் டீம் வரை கூட கூறட்டும். எனக்கு கவலை இல்லை.
பொருத்திருந்து பாருங்கள் நான் எல்லோருக்கும் வேட்டு வைக்கப் போகிறேன். பெட்டோல், டீசல், சமையல் சிலிண்டர் விலையை குறைப்பேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். அதை ஏன் வாக்குறுதியாக கொடுக்கிறீர்கள். இப்போதே திமுக கூட்டணியில் 38 எம்பிக்கள் இருக்கின்றார்களே, இந்த கோரிக்கையை இப்போதே செய்ய வேண்டியது தானே” என்றார்.
+ There are no comments
Add yours