தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறாரா, இல்லையா என்பதே தெரியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். இன்று காலை அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, ”பிரதமர் மோடிக்கு ஆதரவு அலை வீசுகிறது. மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்பார். மேட்டுப்பாளையத்தில் காங்கிரஸ் கவுன்சிலரால் தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால், அந்த கவுன்சிலர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதற்கு மாறாக இளைஞர் மீதும், அவரது தாய் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறை சீர்கெட்டு உள்ளது.” என்றார்.
மேலும், “குற்றவாளிகளை பாதுகாப்பது தமிழக காவல்துறைக்கு அழகல்ல. யூடியூபில் ஏதாவது தகவல் பதிவிட்டால் அதிகாலை 2 மணிக்கு காவல்துறையினர் கைது செய்கின்றனர். ஆனால், இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் இருக்கிறாரா, ஆட்சி செய்கிறாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நடத்துநரும், காவலரும் கட்டிப்பிடித்துக் கொள்வது கட்டப்பஞ்சாயத்து செய்வது போல் உள்ளது. இதுதான் அரசின் வேலையா? இது மிகவும் கேவலமானது. முதல்வர் ஸ்டாலின் கேவலமாக வேலை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக இரட்டை இலக்க எண்களில் வெற்றி பெறும்.” என்றார்.
+ There are no comments
Add yours