மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் 5 தொகுதிகளைப் பெற்றுள்ள தே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மக்களவைத் தேர்தலில், பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைந்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தது. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு மத்திய சென்னை, திருவள்ளூர், கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
தே.மு.தி.க-வைத் தொடங்கிய விஜயகாந்த் காலமான பிறகு தே.மு.தி.க எதிர்கொள்ளும் முதல் தேர்தல் என்பதால் இந்த மக்களவைத் தேர்தல் அக்கட்சிக்கு முக்கியமான தேர்தலாக அமைந்துள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் பெற்றுள்ள தே.மு.திக, 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெள்ளிக்கிழமை (22.03.2024) வெளியிட்டது. அதன்படி, தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மகன் விஜயப்பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:
மத்திய சென்னை தொகுதியில் பார்த்தசாரதி போட்டியிடுகிறார். திருவள்ளூர் தொகுதியில் நல்லதம்பி போட்டியிடுகிறார். கடலூர் தொகுதியில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். தஞ்சை தொகுதியில் சிவநேசன் போட்டியிடுகிறார். விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க சார்பில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அதே விருதுநகர் தொகுதியில், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனும் போட்டியிடுவதால், விஜயபிரபாகரனுக்கும் ராதிகாவுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours