அதிமுகவின் கொடி, பெயர் மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடைக்கோரிய மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
அதிமுகவின் கொடி, பெயர் மற்றும் சின்னத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி – ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டு, அப்போது அதிமுக இரு அணிகளாக பிரிந்தன.
கடந்த ஆண்டு ஜூலை மாத பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பிறகு உள்கட்சி தேர்தல் மூலம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றார். இபிஎஸ் இடைக்கால பொதுசெயலாளராக அறிவிக்கப்படும் சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த எதிர்த்து உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நடைபெற்று வந்தன. இந்த வழக்குகளில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கே தீர்ப்பு சாதகமாக அமைந்தது. அதே வேளையில், அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
இந்த சூழலில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கொடி, சின்னம், அதிமுக பெயர் அடங்கிய லெட்டர் பேடு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இதனை குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், கட்சியில் இல்லாத ஒருவர் அதிமுகவின் சின்னத்தை பயன்படுத்துவது சட்டத்திற்கு முரணானது.
தேர்தல் நெருங்கும் வேளையில் இம்மாதிரியான செயல் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. என்னை அதிமுக பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. இந்த சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம், கட்சி சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. இதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதுதொடர்பாக முன்பு நடந்த விசாரனையில் ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், அதிமுகவின் கொடி, பெயர் மற்றும் சின்னத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
+ There are no comments
Add yours