சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் என்.அண்ணாதுரையை ஆதரித்து, சேலம் மெய்யனூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது: “வரும் 2026-ல் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக மற்றும் அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சி ஏற்படப்போகிறது. அதற்கான முன்னோட்டம் தான் இந்த தேர்தல். அதை மனதில் வைத்தே இந்த கூட்டணியில் சேர்ந்தோம்.
திமுகவை தொடங்கியவர் அண்ணாதுரை. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த அண்ணாதுரை திமுகவும், அதிமுகவும் மறைந்துவிட்டன. அவரது கொள்கைகளையும் முற்றிலும் மறந்துவிட்டனர்.சேலத்துக்கு வரும்போதெல்லாம் வீரபாண்டியாரின் நினைவு வரும். டாக்டர் ராமதாஸும், வீரபாண்டியாரும் சேர்ந்து, பல சமூக போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ஆனால், அவர் திமுகவில் இருந்தார். அவர், சேலம் மாவட்டம் பல்வேறு வளங்களை பெற காரணமாக இருந்தார். ஆனால், வீரபாண்டியாரை திமுக மறந்துவிட்டது.
தமிழக முதல்வராக இருந்த பழனிசாமி, சேலம் மாவட்டத்துக்கு பல திட்டங்களை செய்திருக்க முடியும். அவர் சேலத்துக்கு 2 பாலங்களை கட்டிக் கொடுத்திருக்கிறார். ஆனால், இது தவறான திட்டம். அடுத்த 10 ஆண்டுகளில், போக்குவரத்து நெரிசலால் இந்த பாலம் இடிக்கப்பட வேண்டியதாகும். சேலம் உருக்காலைக்கு 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினர். பிரதமரை சந்தித்து, இந்த உருக்காலையை இயங்க வைப்போம்.
இங்கு காலியாக உள்ள நிலத்தை, அதனை வழங்கிய விவசாயிகளுக்கே மீண்டும் கொடுக்க முயற்சிப்போம். அல்லது வேறு திட்டத்தை இங்கு செயல்படுத்துவோம். பனமரத்துப்பட்டி ஏரியை தூர் வாருவோம்.அதிமுகவினருக்கு ஒரு பணிவான வேண்டுகோள். உங்கள் கட்சி தேசியக் கட்சிகளோடு கூட்டணி வைக்கவில்லை. உங்களுக்கு பிரதமர் வேட்பாளரும் கிடையாது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், பழனிசாமி முதல்வராக ஆகப்போவதில்லை. உங்களுக்கு எதிரி திமுக தான். அந்த எதிரியை வீழ்த்திடவும், பழிவாங்கவும் நீங்கள் பாமகவுக்கு வாக்களித்து, வெற்றி பெறச்செய்யுங்கள்.
சட்டப்பேரவை தேர்தலின்போது 550 வாக்குறுதி அளித்த திமுக, அதில் 50-ஐ கூட நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால், நிறைவேற்றவில்லை. திமுக என்றாலே வாக்குறுதி மன்னர்கள். கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரைத் தொடர்ந்து, உதயநிதியும் வாக்குறுதி அளிப்பதோடு சரி, அதை நிறைவேற்றுவதில்லை.
அரசு ஊழியர்கள் திமுகவை தோற்கடித்தால், ஸ்டாலின் பயந்துபோய் உடனே பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு கையெழுத்து போடுவார். எனவே, திமுகவை தோற்கடியுங்கள். சேலத்துக்கு வந்த பிரதமர் மோடி, ராமதாஸைக் கட்டி அணைத்து, மரியாதை கொடுத்து பேசினார். பாஜக கூட்டணியின் மிக மூத்த தலைவர் என்று பேசினார். ராமதாஸின் அனுபவமும், அன்புமணியின் திறமையும் நாட்டுக்கு தேவை என்று பேசினார். இது தமிழர்களுக்கெல்லாம் பெருமை.
சில வார்த்தைகளை பேசிய பிரதமர் மோடி, தமிழில் பேச முடியவில்லை என்று வருத்தப்பட்டார். ஆனால், தமிழை வைத்து ஆட்சிக்கு வந்த திமுக, அதிமுக-வினர் தமிழை மறந்துவிட்டனர். தாய்மொழியான தமிழை படிக்காமலே, பட்டம் வாங்கிவிடலாம் என்ற நிலை தான் தமிழகத்தில் உள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான கொள்கை கொண்டவர்கள் யாராவது பாஜகவில் இருக்கிறார்களா? ஆனால், ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையில், சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றுதான் கூறியிருக்கிறார். திமுக, அதிமுக ஆகியவற்றின் மீது மக்களே உங்களுக்கு கோபம் இருக்கிறது. ஆனால், காந்தியை பார்த்ததும் உங்கள் கோபம் தீர்ந்துவிடுகிறது. இந்த தேர்தலில் உங்கள் கோபத்தை வெளிப்படுத்துங்கள்” என்று அன்புமணி பேசினார்.
+ There are no comments
Add yours