நாட்டு மக்கள் மேல் உண்மையான அக்கறை கொண்ட நமது இந்தியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்தவுடன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் இந்தியா கூட்டணிக்கு உங்களது ஆதரவைத் தாரீர் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ, அப்போதுதான் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும். கடந்த அதிமுக ஆட்சியில் கஜானாவைத் தூர்வாரி மாநிலத்தைக் கடும் நிதி நெருக்கடியில் விட்டுவிட்டுச் சென்றார்கள். இந்தச் சூழலிலும் இன்றைக்கு மத்திய அரசுக்கு இணையான அகவிலைபடி உயர்வை அப்படியே வழங்கி வருகிறது நமது அரசு.
அரசு ஊழியர்கள் இறந்து போனால் வழங்கப்பட்டு வந்த மூன்று லட்ச ரூபாய் குடும்பநல நிதியை தற்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி இருக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்கள் கோரிக்கையான தொடக்கக் கல்வித் துறையைப் பள்ளிக்கல்வித் துறையிடமிருந்து பிரித்துத் தனியாகச் செயல்பட உத்தரவிட்டோம்.
இதுபோன்று அடுக்கடுக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ள அரசுதான் நமது திராவிட மாடல் அரசு. ஆனால், இப்போது திடீரென்று அரசு ஊழியர்கள் மீது கரிசனம் வந்துள்ளது போல் தேர்தலுக்காக நாடகமாடும் பழனிசாமியின் வரலாறும், அதிமுகவின் வரலாறும் எப்படிப்பட்டது?. ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியம் பற்றியெல்லாம் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து, அசிங்கப்படுத்தி, எள்ளி நகையாடி அவர்களை கோரிக்கைகளுக்காக அழைத்துக் கூடப் பேசாமல் புறக்கணித்து அவமதித்தவர்தான் பழனிசாமி.
இப்படிப்பட்டவருக்கு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?. எஸ்மா – டெஸ்மா கொண்டு வந்து நள்ளிரவு அரசு ஊழியர்களைக் கைது செய்ததும், அடக்குமுறை செய்ததும் தானே அதிமுக ஆட்சியின் அலங்கோலம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம்தானே தவிர, அவை நிராகரிக்கப்படவில்லை.
மத்தியில் நாம் விரும்பும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தமிழ்நாட்டின் நிதிநிலை விரைவில் சீராகும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். எனவே, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நல்லதொரு மாற்றம் ஏற்பட நமது இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours