நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்று பெயரிடப்பட்ட திட்டத்தின் வாயிலாக நலத்திட்டங்களின் செறிவூட்டலை அடைவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலம் பாகூர் கிழக்கு பஞ்சாயத்தில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, புதுச்சேரி முதல்வர் மக்களுக்கு என்ன திட்டம் கொண்டுவர நினைக்கிறாரோ, அவை அனைத்துக்கும் நான் ஒப்புதல் அளிக்கிறேன். பிரதமர் மோடி பல திட்டங்களை கிராம மக்களுக்காக வழங்கி வருகிறார். மருத்துவ காப்பீடு திட்டம், விவசாயிகளுக்கான பயிர் பாதுகாப்பு திட்டம், பிறந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து திட்டம் உள்ளிட்டவைகளை கொடுத்து வருகிறார் என தெரிவித்தார்.
இதன்பின், இந்தியாவிலேயே புதுச்சேரியில் மட்டும் தான் ரேஷன் கடைகள் இல்லாமல் உள்ளது. ரேஷன் கடையை எப்போது திறக்கப் போகிறீர்கள்? என ஆளுநரிடம் பெண்கள் கேள்வி எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதுகுறித்து, பிறகு பேசிக் கொள்ளலாம் என ஆளுநர் பதில் சொல்லாமல் சென்றார்.
இதன்பின் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து பிறகு தெரிவிப்பேன், இப்போது கூற முடியாது, அது சஸ்பென்ஸ் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார். மேலும், புதுச்சேரி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாகவும் பின்னர் அறிவிப்பேன் என்றும் ஆளுநராக இருப்பதால் அதுகுறித்து பேச முடியாது எனவும் கூறிய அவர், ஆளுநர் – முதல்வர் அமர்ந்து பேச வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது வரவேற்கத்தக்கது எனவும் குறிப்பிட்டார்.
+ There are no comments
Add yours