உடல் பருமன், ஹைபர் தைராய்டிசம், பிசிஓடி, மாதவிடாய் ஒழுங்கின்மை, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளன.
வேலை முறையில் மாற்றம், வாழ்க்கை முறையில் மாற்றம், அதிக கலோரிகளை கொண்ட உணவுமுறை, உடற்பயிற்சியின்மை, மரபணுக் குறைபாடுகள், மன அழுத்தம், தூக்கமின்மை எனப் பல காரணங்களால் இந்த உடல்நலப் பிரச்னைகள் ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கிறது.
சிறுமிகளுக்கு குழந்தைப் பருவத்தில் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கி, உடல் பருமன் பிரச்னையைக் கொண்டு வருகிறது. இது விரைவில் மாதவிடாய், ஒழுங்கற்ற மாதவிடாய், கர்ப்பத்தின் 9வது மாதத்திற்குப் பிறகு ஏற்படும் சிக்கல்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிரசவ நேர சிரமங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
ஆனால், மும்பை அருகே மீரா சாலை பகுதியைச் சேர்ந்த 160 கிலோ எடையுள்ள ஒரு பெண் இந்தச் சிரமங்களைக் கடந்து வந்துள்ளார். சிமோரா டிசோசா என்ற அந்தப் பெண் 33 வயதில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
இவர்களுக்குத் திருமணமாகி 14 ஆண்டுகள் கழித்து இந்தக் குழந்தை பிறந்துள்ளது. இந்தப் பிரசவம் சிசேரியன் முறையில் செய்யப்பட்டது. சிமோரா ஒரு பிபிஓ நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
சிமோரா குழந்தைப் பருவத்தில் இருந்தே உடல் பருமன் பிரச்னை, ஹைப்பர் தைராய்டிசம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்.
இதனால் அவரது எடை சில ஆண்டுகளுக்கு முன்பு 185 கிலோ வரை உயர்ந்தது. அதனால் உடல் எடையைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று. அதற்குப் பிறகு அவரது எடை 130 ஆகக் குறைந்தது.
அதன் பின்னர் கர்ப்ப காலத்தில் அவரது எடை 30 கிலோ அதிகரித்து, பிரசவ நேரத்தில் 160 கிலோவை எட்டியது. இருப்பினும் சிமோரா அனைத்து வழிமுறைகளையும் முறையாகப் பின்பற்றியதால் அவருக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படவில்லை என்று அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதுமட்டுமின்றி 3.2 கிலோ எடையில் ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்தவுடன் அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டன.
அதுமட்டுமின்றி, பிரசவத்திற்குப் பிறகு தாய்ப்பால் சுரக்கத் தொடங்கச் சிறிது நேரம் ஆகும். இவர்களின் விஷயத்தில், மிகக் குறுகிய காலத்திலேயே தாய்-சேய் உறவு தொடங்கிவிட்டது. வழக்கமாக தாய்க்கும் சேய்க்கும் இடையிலான பிணைப்புக்குச் சிறிது நேரம் எடுக்கும். ஆனால், சிமோராவுக்கும் அவரது குழந்தைக்கும் இடையே இந்தப் பிணைப்பு மிக விரைவாக நடந்ததாக அவரைக் கவனித்துக்கொண்ட மருத்துவர் கூறுகிறார்.
மற்ற பெண்களைப் போலவே சிமோராவும் 2, 3 நாட்களில் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். சுவாரஸ்யமாக, இந்தக் காலகட்டத்தில் அவரது எடை 160இல் இருந்து 152 ஆகக் குறைந்தது.
உடல் பருமன் மற்றும் பிற உடல்நிலை சார்ந்த சிக்கல்கள் இருக்கும் பெண்கள் பிரசவ காலத்தில் சிக்கல்களை எதிர்கொள்வதாகக் கருதப்படுகிறது. இதற்கு நிபுணத்துவம் வாய்ந்த, அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் சிறப்பு அனுபவம் வாய்ந்த மயக்கவியல் நிபுணர்கள் தேவை.
மீரா சாலை பகுதியிலுள்ள வோக்கார்ட் மருத்துவமனையில் சிமோராவுக்கு பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர் மங்கள பாட்டீல், “சிமோராவின் கர்ப்பம் உடல் பருமன் மற்றும் பிற துணை நோய்கள் காரணமாகச் சிக்கலில் இருந்தது. கர்ப்ப காலத்தில், பருமனான பெண்கள் குறைப் பிரசவம், கருச்சிதைவு, கர்ப்பகால சிக்கல்கள், கர்ப்பகால நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சுருக்கங்கள், குறைந்த எடையுள்ள குழந்தைகள் போன்ற சவால்களையும் சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர்,” என்று பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.
“அதிக ஆபத்துள்ள பிரசவங்களில், நோயாளிக்கு அறுவை சிகிச்சை பிரசவம் தேவைப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நோயாளிக்கு பிரசவத்தின்போது அல்லது அதற்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்படலாம் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படலாம். மேலும், பிரசவத்திற்குப் பிந்தைய உடல் பருமன் நோய் டீப் வெயின் த்ரோம்போசிஸ் (பொதுவாக கால்களின் ஆழமான நரம்பில் ரத்த உறைவு ஏற்படும். இந்த நிலை தீவிரமானது. ஏனெனில் ரத்தக் கட்டிகள் தளர்ந்து நுரையீரலில் தங்கக்கூடும்).
ஆனால், சிமோராவை பற்றிப் பேசுகையில் அவர், “உடல் பருமன் உள்ள நோயாளி கர்ப்பத்திற்கு முன் சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். இந்த மாற்றங்கள் மூலம் உடல் எடையைக் குறைக்க வேண்டும். அதோடு தைராய்டு பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் ஆகியவை இருந்தால், நோயாளிக்கு மருத்துவ ஆலோசனையின்படி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
உடல் பருமன் நோயுள்ளவர்களால் உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் எடையைக் குறைக்க முடியாது. உடல் எடையைக் குறைக்க பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை ஒரு தேர்வாக இருக்கலாம். சிமோராவை பொறுத்தவரை, அவர் கருத்தரிக்க விரும்பியதால் அவருக்கு பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை மூலம் உடல் எடை குறைக்கப்பட்டது. இது அவரது எடையை 185 கிலோவில் இருந்து 130 கிலோவாக குறைத்தது,” என்று கூறினார்.
அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களுக்கு முறையான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் அடிக்கடி மருத்துவரிடம் பரிசோதனை செய்வதும் தேவைப்படுகிறது. பொதுவாக கர்ப்ப காலத்தில் சராசரி எடை அதிகரிப்பு 11 கிலோ. ஆனால், இந்த விஷயத்தில் 30 கிலோ வரை இருக்கும் என்கிறார் மருத்துவர் பாட்டீல்.
“பிரத்யேக மகப்பேறியல் துறை, அறுவை சிகிச்சை துறை, மயக்க மருந்து துறை, நியோனாட்டாலஜி துறை, உட்சுரப்பியல் துறை ஆகிய அனைத்திலும் உள்ள சவால்களையும் சந்தித்தாலும், பிரசவம் பாதுகாப்பான முறையில் நடந்து முடிந்தது,”
“இதுபோன்ற கர்ப்ப காலங்களில் இத்தகைய ஆலோசனை பெரும் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் நோயாளியின் நம்பிக்கையை அதிகரிக்க முடியும்,” என்கிறார் மருத்துவர் மங்களா பாட்டீல்.
பிபிசி மராத்தி சேவையிடம் பேசிய மருத்துவர் மங்களா பாட்டீல், இந்தப் பிரசவத்தில் ஆரம்பத்தில் இருந்தே சிமோராவுடன் இணைந்து பணியாற்றியதாகக் கூறுகிறார். அவர் கர்ப்பமானபோது அவர் சிறிது அச்சமும் சந்தேகமும் கொண்டுள்ளார். தாய்-சேயின் உடல்நிலை குறித்து அவருக்கு நம்பிக்கை அளித்ததாகக் கூறுகிறார் மருத்துவர் பாட்டீல்.
“நாங்கள் வழங்கிய உணவு மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றித் தனது வாழ்க்கை முறையிலும் பெரிய மாற்றங்களைச் செய்தார் சிமோரா. அவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து அறிவுறுத்தல்களையும் நேர்மையாகப் பின்பற்றியதே இந்த வெற்றிக்குக் காரணம்.”
சிமோராவை பற்றிப் பேசிய மருத்துவர் பாட்டீல், “சுகப் பிரசவம் என்பது மட்டுமே குறிக்கோளாக இருக்கக்கூடாது. தாய், சேய் இருவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதே குறிக்கோளாக இருக்க வேண்டும். இதுபோன்ற கர்ப்ப காலங்களில் இத்தகைய ஆலோசனை பெரும் பங்கு வகிக்கிறது. இது முக்கியமானது. இதன்மூலம் நோயாளி உறுதிப்பாட்டையும் நம்பிக்கையையும் அதிகரிக்க முடியும்,” என்கிறார்.
இதுவொரு புதிய வாழ்க்கை:
திருமணத்திற்குப் பிறகு குழந்தைப் பேறு பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை எனக் கூறும் சிமோரா டிசோசா ஆனால் இப்போது இந்த வயதில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடிந்திருப்பது தனக்கொரு புதிய வாழ்வு கிடைத்ததைப் போல் உணர வைத்துள்ளதாகக் கூறினார்.
“எனக்கு சிறுவயதில் இருந்தே உடல் பருமன், தைராய்டு பிரச்னை இருந்தது. அதனால், இது மிகவும் ஆபத்தானது. ஆனால் என் கணவர் மிகவும் உறுதுணையாக இருந்தார். என் கணவரின் தந்தைக்கும் தைராய்டு பிரச்னை உள்ளது. அதனால் இதில் உள்ள பிரச்னையை அவர்கள் உணர்ந்தனர். நாங்கள் 2010இல் திருமணம் செய்துகொண்டோம். எனது 30களில் உடல் எடையைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். இப்போது 33 வயதில் என்னால் அதைச் செய்ய முடிந்தது,” எனப் பெருமிதத்துடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
பிரச்னைகள் மற்றும் நோய்களுடன் வாழும்போது உங்களுக்கு நேர்மறையான பார்வை இருந்தால், உங்கள் பயணம் எளிதாகும் என்று தான் நினைப்பதாகக் கூறுகிறார் அவர்.
“இப்போது எனக்கு இந்தப் புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. நான் நல்ல தாயாக என் குழந்தையைக் கவனித்துக்கொள்ள விரும்புகிறேன்.”
பெரும்பாலான பெண்கள் கருத்தரிக்கச் சரியான எடையுடன் இருக்கிறார்களா? பல பெண்களுக்குத் தங்களால் கருத்தரிக்க முடியுமா என்ற சந்தேகமும் தங்கள் எடை அதற்குச் சரியான எடையா என்ற சந்தேகமும் எழுகிறது. அத்தகைய பெண்களை பி.எம்.ஐ (உடல் நிறை குறியீட்டெண்) மீது கவனம் செலுத்துமாறு அறிவுறுத்துகிறார் மருத்துவர் மங்களா பாட்டீல். அனைவரும் ஆளுக்கொரு எடை விதியைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, அறிவியல்பூர்வமாக பி.எம்.ஐ முறைப்படி உடல் எடையைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
“தற்போதைய எடையில் 10 சதவீதம் குறைப்பதுகூட கருப்பையில் இருந்து முட்டை வெளியேறுவதில் இருக்கும் தடைகளை வெகுவாகக் குறைப்பதாகவும், பிஎம்ஐ மதிப்பை 18.5 மற்றும் 24க்கு இடையில் தக்கவைக்க முயல வேண்டும் எனவும் மருத்துவர் பாட்டீல் வலியுறுத்துகிறார். மேலும், பி.எம்.ஐ மதிப்பு 25க்கு மேல் இருப்பின் அது அதிக எடை கொண்டவர்களாகவும், 30க்கு மேல் இருந்தால் அது உடல் பருமன் நோயாகவும் கருதப்படுகிறது.
பி.எம்.ஐ மதிப்பு 24க்கு மேல் இருந்தால், கருப்பையில் இருந்து முட்டை வெளியேற்றப்படும் செயல்முறை உட்படப் பல உடலியல் செயல்பாடுகளில் தடைகள் ஏற்படலாம். எனவே, பி.எம்.ஐ 30க்கு மேல் உள்ள பெண்கள் அதைக் குறைக்க முயல வேண்டும். 24 முதல் 29 வயதிற்குட்பட்ட பெண்களும் இதைக் குறைக்க முயன்றால் அதிக பலன்களைப் பெறுவார்கள் எனக் கூறுகிறார் மருத்துவர் மங்களா பாட்டீல்.
உடல் பருமனைக் குறைக்க வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
உடல் பருமனால் பெண்கள் அனுபவிக்கும் துன்பத்தைக் குறைக்க, மருத்துவர் மங்களா பாட்டீல் சில தீர்வுகளைக் கூறுகிறார்.
முதலில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்களை நிறுத்த வேண்டும். இன்று பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். அந்த வேலையில் உட்கார்ந்தே இருக்கும் சூழல் இருப்பின், அவர்கள் தங்கள் உடல் இயக்கத்தை அதிகரிக்க வேண்டும்.
வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். நல்ல பி.எம்.ஐ மதிப்பைப் பராமரிக்க முறையான உணவு மற்றும் உடற்பயிற்சியைப் பின்பற்ற வேண்டும். கூடுதலாக, போதுமான தூக்கம் மட்டுமின்றி அது தரமான தூக்கமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
வைட்டமின் டி, ஃபோலிக் அமிலம், மல்டிவைட்டமின் ஆகியவற்றை எடுத்துக்கொள்வதோடு, தைராய்டு இருந்தால் அதற்கான மருந்துகளும் கொடுக்கப்பட வேண்டும்.
இப்போது உடல் பருமனான பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு நோயாளி சுமார் 110-120 கிலோ எடையுடன் மருத்துவமனைக்கு வருவதாக அவர் கூறுகிறார். மருத்துவர் மங்களா பாட்டீல் சில மாதங்களுக்கு முன்பு 143 கிலோ எடையுள்ள பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார்.
+ There are no comments
Add yours