நச்சுப் பொருள் இருக்கும் பண்டங்கள் குறித்த விளக்கம் !

Spread the love

சமீபத்தில் சிறார்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரோடமைன் பி எனும் நச்சுப் பொருள் கலந்திருப்பது உணவு பாதுகாப்புத் துறை நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.

அதனால் 90ஸ் கிட்ஸ்களின் பிடித்தமான இனிப்பு வகைகளின் ஒன்றான இளஞ்சிவப்பு நிறத்தில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய் தற்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை சோதித்து பார்த்தபோது, அவற்றிலும் ரோடமைன் பி இருப்பது தெரியவந்ததால், அங்கும் பஞ்சு மிட்டாய் விற்பது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

பஞ்சு மிட்டாயில் கண்டறியப்பட்டுள்ள ரோடமைன் பி என்பது என்ன? அது வேறு எந்தெந்த உணவுப் பொருட்களில் உள்ளது? இதனை உட்கொள்வதால் என்ன பாதிப்பு?

ரோடமைன் பி என்பது ஒரு செயற்கை சாயம் ஆகும். இது பளிச் என்ற சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தை கொடுக்கக்கூடியதாகும். இந்த வேதியியல் நிறமி, தண்ணீரில் கலக்கக்கூடியத் தன்மை அதிகம் கொண்டதாலும், குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடியது என்பதாலும், ஜவுளித்துறை, காகிதத் துறை, தோல் துறைகளில் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது.

ரோடமைன் பி- யில் உள்ள வேதிப் பொருட்கள் மக்கும் தன்மையற்றவை ஆகும். வெப்பம், வெளிச்சம் ஆகியவற்றை தாங்கக் கூடியவை.

ரோடமைன் பி, ஜவுளி, தோல் உள்ளிட்ட துறைகளில் நிறமியாக பயன்படுத்துவதற்கு அனுமதி உண்டு. ஆனால் உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களில் செயற்கையாக நிறம் கொடுக்கும் பொருட்கள் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதே. ஆனால், எந்தெந்த பொருட்களை பயன்படுத்தலாம், எவ்வளவு பயன்படுத்தலாம் என்ற வழிகாட்டுதல்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வகுத்துள்ளது.

ரோடமைன் பி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், அதை உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது. உணவுப் பொருட்கள் தயாரிப்பதில், பதப்படுத்துவதில், விநியோகிப்பதில் ரோடமைன் பி பயன்படுத்துவோர் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு சட்டம் (2006)-ன் படி தண்டிக்கப்படுவர்.

சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களை தரக்கூடிய ரோடமைன் பி, அந்த நிறத்தில் உள்ள உணவுப் பொருட்களிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் மற்றொரு உணவுப் பொருளான ரோஸ் மில்க்-ல் ரோடமைன் பி கலக்கப்படுகிறது என்று சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தெரிவிக்கிறார்.

பிபிசி தமிழிடம் அவர் பேசும் போது, “பஞ்சு மிட்டாயில் கண்டறியப்பட்ட ரோடமைன் பி, ரோஸ்மில்க், கொட்டைப் பாக்கு, சிவப்பு முள்ளங்கி ஆகியவற்றிலும் சேர்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மில்க் பேடா என்ற இனிப்பு வகையின் மீது தூவப்படும் இளஞ்சிவப்பு துகள்களிலும் உள்ளது” என்கிறார்.

“உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்படும் நிறமிகள் உள்ளன. உதாரணமாக சிவப்பு நிறத்துக்கு அலூரா ரெட், பச்சை நிறத்துக்கு ஆப்பிள் கிரீன். அவையும் குறிப்பிட்ட அளவு மட்டுமே உணவுப் பொருளில் இருக்க வேண்டும். ஆனால், இந்த ரோடமைன் பி எந்த உணவுப் பொருளிலும் துளி அளவும் இருப்பதற்கு அனுமதி இல்லை” என்று அவர் மேலும் எடுத்துரைத்தார்.

சர்க்கரை வள்ளி கிழங்கின் மேற்பரப்பில் சிவப்பு நிறம் கூடுதலாக வெளிப்படுவதற்கு ரோடமைன் பி பயன்படுத்தப்படுகிறது. அதே போன்று, மிளகாய் பொடி, கேழ்வரகு, சாஸ் வகைகளிலும் சிவப்பு நிறம் பெறுவதற்காக சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறது.

ரோடமைன் பி கலக்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களையும் நுகர்வோர் பார்த்த உடனேயே ரோடமைன் பி இருக்கிறதா இல்லையா என கண்டறிய முடியாது. எனினும், சில உணவுப் பொருட்களில் ரோடமைன் பி உள்ளதா என கண்டறிய வீட்டிலேயே செய்யக் கூடிய சில எளிய சோதனைகள் உள்ளன.

ரோடமைன் பி தண்ணீரிலும் எண்ணெயிலும் எளிதில் கலக்கக்கூடியதாகும். இந்த தன்மையை கொண்டு ரோடமைன் பி இருப்பதை கண்டறியும் வழிமுறைகளை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வழங்கியுள்ளது.

உதாரணமாக சர்க்கரைவள்ளி கிழங்கின் மேற்பரப்பில் உள்ள சிவப்பு நிறத்தை வீட்டிலேயே சோதித்து பார்க்கலாம். சிறிதளவு பஞ்சை தண்ணீர் அல்லது எண்ணெயில் நனைத்துக் கொள்ள வேண்டும்.

அதை கிழங்கின் மேற்பரப்பில் லேசாக தடவிப் பார்க்கும் போது, அந்த பஞ்சு இளஞ்சிவப்பு நிறமாக மாறினால் அதில் ரோடமைன் பி கலக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். பஞ்சு நிறம் மாறாமல் வெள்ளையாகவே இருந்தால் ரோடமைன் பி கலக்கவில்லை என்று தெரிந்து கொள்ளலாம். இதே போன்ற பரிசோதனை மூலம், கேழ்வரகில் ரோடமைன் பி கலந்திருப்பதையும் கண்டறிய முடியும்.

ரோடமைன் பி மற்றும் இது போன்ற தடை செய்யப்பட்ட வேறு வேதிப் பொருட்கள் உணவுப் பொருளில் இருப்பதை எப்படி கண்டறிய வேண்டும் என்று விளக்கும் வீடியோக்களை இந்திய அரசின், https://www.youtube.com/@fssai_india என்ற தளத்தில் காணலாம்.

பஞ்சு மிட்டாயில் ரோடமைன் பி கலந்திருக்கிறது இல்லையா என்பதை நுகர்வோர் உறுதி செய்ய முடியாது. அந்த மாதிரிகளை உணவு பாதுகாப்பு ஆய்வகத்தில் சோதித்த பிறகே, ரோடமைன் பி உள்ளதா என்று உறுதி செய்ய முடியும்.

சமீபத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், ஆய்வக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அவை பாதுகாப்பற்றவை என்று உணவுப் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

“ஒரு உணவுப் பொருளில் தடை செய்யப்பட்ட நிறமி இருக்கிறதா இல்லையா என்று குறிப்பிட்டு ஒருவரால் பார்த்த உடனே துல்லியமாக சொல்ல முடியாது. ஆனால் மக்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகள், சாக்லேட், கேக் என எதுவாக இருந்தாலும் உங்கள் கண்களை கவரும் வண்ணம் பளிச்சென்று உணவுப் பொருட்கள் இருந்தால் அவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இயற்கையான நிறங்கள் பளீரென்று இருக்காது” என்கிறார் சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி சதீஷ் குமார்.

ரோடமைன் பி புற்றுநோய் மற்றும் மரபணு பிறழ்வு ஏற்படுத்தக்கூடியது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. தோல் வியாதிகள், சுவாச பாதிப்புகள், கல்லீரல் மற்றும் சிறுநீரக சிதைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவே மனித உட்கொள்ளுதலுக்கு தகுதி அற்றது என்பதால், ரோடமைன் பி உணவுப் பொருட்களில் தடை செய்யப்பட்டுள்ளது

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் ரோடமைன் பி சுற்றுச்சூழலையும் நிலத்தடி நீரையும் பாதிக்கிறது.

ரோடமைன் பி உட்கொள்வதால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என்று சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருந்தியல் துறைத் தலைவர் எஸ். சந்திரசேகர் தெரிவிக்கிறார்.

“ரோடமைன் பி தொடர்ந்து உட்கொண்டால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ரோடமைன் பி-க்கும் கல்லீரல் பாதிப்புக்கும் உள்ள தொடர்பு பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டதே” என்றார்.

ரோடமைன் பி உட்கொள்வதால், கல்லீரல் தவிர நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. அதன் காரணமாக, சிறு மூளை செயல்பாடுகளில் தடை ஏற்படும். மேலும் நரம்பு தளர்ச்சி, முதுகு தண்டுவட பாதிப்பு ஆகியவையும் ஏற்படும் என்று மருத்துவர் சந்திரசேகர் குறிப்பிடுகிறார்.

பொதுவாக ஒரு பொருளை ஒரு முறை உட்கொள்வதாலேயே தீவிர பாதிப்புகள் உடனே ஏற்படாது. எந்த பொருளாக இருந்தாலும் அதை தொடர்ந்து உட்கொள்ளும் போது தான் அதிக பாதிப்பு ஏற்படும்.

ஆனால், “சில நேரங்களில் ஒரு முறை உட்கொண்டாலே உடலில் தீவிர நச்சுத்தன்மை ஏற்படக்கூடும். ஒவ்வொருவரின் உடல் எதிர்ப்பு சக்தி பொருத்தும், உணவுப் பொருளில் எவ்வளவுன் ரோடமைன் கலக்கப்படுகிறது என்பதை பொருத்தும் இது ஏற்படும். அப்படி தீவிர நச்சுத்தன்மை உடனடியாக ஏற்பட்டால் அது மூளையை பாதிக்கும்” என்று பிபிசியிடம் பேசிய போது விளக்கினார் மருத்துவர் சந்திரசேகர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours