உலகின் மிக அழகான ரயில் பயணத்தை விரும்புகிறவர்கள் பயணிக்க விரும்பும் ஊட்டி மலை ரயிலுக்கு இன்று 115 வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நீலகிரி மலைகளின் இடுக்குகளிலும், எழில் கொஞ்சும் அடர்ந்த வன பகுதிகளிலும் நாள் தோறும் பயணிகளை ஏற்றி தவழ்ந்து செல்லும் மலை ரயில் கடந்த 117 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே இயக்கப்பட்டது. அதன்பின்னர் ஒன்பது ஆண்டுகள் கழித்து குன்னூரில் இருந்து ஊட்டி அருகேயுள்ள பெர்ன்ஹில் என்ற பகுதிக்கு இயக்கப்பட்டது.
அதன் பின் கடந்த 1909 அக்டோபர் 15-ம் தேதி ஊட்டி ரயில் நிலையம் அமைக்கப்பட்டு அது வரை இயக்கப்பட்டது. ஆசியக் கண்டத்தில் மிக நீளமான மீட்டர் கேஜ் மலை ரயில் பாதை இதுவாகும். இந்த ரயில் பாதை ஆசியாவிலேயே மிகவும் செங்குத்தாக இருப்பதால் பல் சக்கரத்தின் உதவியுடன் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
இந்த மீட்டர் கேஜ் மலை ரயில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் சிறப்பு வாய்ந்த ரயிலாக திகழ்கிறது 11.516 மீட்டர் நீளமும், 2.15 மீட்டர் அகலமும், 4 பெட்டிகளையும் கொண்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை (46 கி.மீ.,) தூரம் கடக்க 208 வளைவுகளையும், 250 பாலங்களையும், 16 சுரங்க பாதைகளையும் கடந்த செல்கிறது. பசுமை நிறைந்த மலைகளின் நடுவே தவழ்ந்து வருகிறது.
கடந்த 2005 ஜூலை 15-ம் தேதி டர்பன் நகரில் நடந்த உலக பாரம்பரிய குழுவின் 29வது கூட்டத்தில் நீலகிரி மலை ரயிலை யுனஸ்கோ பாரம்பரிய ரயிலாக அறிவித்தது. இதனால், இந்த ரயில் நிலையம் மற்றும் ரயில் உலக சுற்றுலா ஏட்டில் இடம் பெற்றது.
புகை கக்கிக் கொண்டு செல்லும் ரயில்
புகை கக்கிக் கொண்டு செல்லும் ரயில்
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த மலை ரயிலின் 115 வது பிறந்த நாள் விழா இன்று ஊட்டி ரயில் நிலையத்தில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஊட்டியை மலை ரயில் வந்தடைந்தவுடன் ரயிலுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி பாரம்பரிய மலை ரயில் அமைப்பினர் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் வரவேற்றனர்.
+ There are no comments
Add yours