திருமலை: அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, நாளை அங்கு வரும் பக்தர்களுக்கு ஏழுமலையானின் லட்டு பிரசாதங்களை வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்தது.
இதற்காக தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரான சவுரப் போரா மற்றும் முன்னாள் உறுப்பினரான ராமேஸ்வர் ராவ் ஆகிய இருவரும் இணைந்து தலா 2000 கிலோ பசு நெய்யை தானமாக வழங்கினர். இதனை தொடர்ந்து, திருமலையில் உள்ள சேவா சதன் கட்டிடத்தில், ஸ்ரீவாரி சேவா பெண் தன்னார்வலர்கள் 1 லட்சம் லட்டு பிரசாதங்களை 350 பெட்டிகளில் அடுக்கினர்.
இந்த லட்டு பிரசாதங்கள், ஒரு வேன் மூலம் திருப்பதி அடுத்துள்ள ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டு, விமானம் மூலம் அயோத்திக்கு அனுப்பப்பட்டது. அங்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையிடம் லட்டு பிரசாதங்கள் ஒப்படைக்கப் பட்டன.
இந்நிகழ்ச்சியில் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர். ரவி, இணை நிர்வாக அதிகாரி (பொது) சிவப்பிரசாத், துணை நிர்வாக அதிகாரி (மடப்பள்ளி) ஸ்ரீநிவாசுலு மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் பங்கேற்றனர்.
அயோத்தி சீதைக்கு ஆந்திராவில் நெசவு தொழிலாளர் மற்றும் வியாபாரி நாகராஜு என்பவர் ரூ. 5 லட்சம் செலவில் 13 மொழிகளில் இருபுறமும் ராமாயணம் புகைப்படங்களுடன் கூடிய பட்டுப்புடவையை காணிக்கையாக வழங்க உள்ளார். இது குறித்து நாகராஜூ கூறியதாவது: வால்மீகி மகாபாரதம் எழுத தொடங்கியது, தசரதர் யாகம் மேற்கொண்டது, ஸ்ரீ ராமரின் அவதாரம், அதன் பின்னர் அவரது கல்வி, வில் பயிற்சி, சுயம்வரம், சீதாதேவி விவாஹம் பட்டாபிஷேகம் என ராமாயண படலம் முழுவதும் சுமார் 400 படங்கள் இந்த பட்டுப்புடவையின் இரு புறமும் நெய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த புடவை முழுவதும் நம் நாட்டில் பேசப்படும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, அஸ்ஸாமி, உருது என மொத்தம் 13 மொழிகளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என நெய்யப்பட்டுள்ளது. இது மொத்தம் 16 கிலோ எடை கொண்ட புடவையாகும். நீளம் 60 மீட்டர். ரூ.5 லட்சம் செலவில் புடவையை தயாரிக்க சுமார் 7 மாதங்கள் வரை ஆனது. இந்த பட்டு சேலை அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு நாகராஜூ கூறினார்.
+ There are no comments
Add yours