சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறப்பைக் கொண்டாடும் வகையில் சந்தன அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மகரவிளக்குப் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று முன்தினம் மாலை நடைதிறக்கப்பட்டது. நேற்று அதிகாலை 3 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் நடைபெற்றது.
ஐயப்பனுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் சந்தனஅபிஷேகம் பிரசித்தி பெற்றதாகும். மகரவிளக்கு பூஜைக்கு நடைதிறக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் முதல் களபாபிஷேகம் (சந்தனம்) என்பதால் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கிழக்கு மண்டபத்தில் தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில், மேல்சாந்தி பி.என்.மகேஷ் நம்பூதிரி தங்கக் கும்பத்தில் சந்தனத்தை ஏந்தியபடி வலம் வந்தார். மங்கல வாத்தியங்கள் முழங்க, அழகிய வேலைப்பாடுடன் கூடிய பிரம்மோற்சவ திருக்குடை ஏந்திச் செல்லப்பட்டது.
தொடர்ந்து சந்நிதானத்துக்கு அபிஷேகம் கொண்டு வரப்பட்டு, ஐயப்ப சுவாமிக்கு சந்தன அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர்பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இரவு 11மணிக்கு ஹரிவராசன பாடலுடன் நடைசாத்தப்பட்டது.
இணைய வசதி: சபரிமலையில் செல்போன் நெட்வொர்க் கிடைப்பதில் பிரச்சினை உள்ளது. இதனால் பக்தர்களின் வசதிக்காக தற்போது வைஃபை ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் அரை மணி நேரம் இலவசமாகவும், அதன் பின்னர் ஒரு ஜிபி-க்கு ரூ.9 கட்டணத்துடனும் வைஃபை வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக பிஎஸ்என்எல் சார்பில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சந்நிதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தூய்மைப் பணி நடைபெறுகிறது. இப்பணியில் ஐயப்ப சேவா சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
+ There are no comments
Add yours