அயோத்தியில் சுவாமி தரிசனம் செய்வதற்காக செல்லும் பக்தர்கள் என்னென்ன உடைகள் அணியலாம் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் கோயிலின் கருவறையில் பால ராமர் சிலை இன்று பகல் 12.15-ல் இருந்து 12.45 மணிக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. இந்த பிரதிஷ்டை பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
அதேபோல், இந்த நிகழ்வை நேரடியாக காண நாடு முழுவதும் இருந்து முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என நாட்டின் முக்கிய பிரபலங்கள் 7 ஆயிரம் பேர் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் பால ராமரை தரிசனம் செய்ய இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அயோத்தி கோயிலில் உள்ள ராமரை நாளை முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாள் ஒன்றிற்கு 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. காலை 7 முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். மேலும், காலை 6.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் நடைபெறும். சிறப்புப் பூஜையை காணவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவை https://srjbtkshetra.org/ என்ற இணையதளத்தில் செய்யதுகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அணிய வேண்டிய உடை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஆண்கள், வேஷ்டி, சட்டை, குர்தா-பைஜாமா, முண்டு என அழைக்கப்படும் வேஷ்டி, பருத்தி ஆடைகள் உள்ளிட்டவற்றை அணியலாம். ஷார்ட்ஸ், டீசர்ட்ஸ், ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணியக்கூடாது.
பெண்கள், புடவை, பட்டு சேலை, சல்வார் கமீஸ், லெஹெங்கா சோளி, பலாஸ்ஸோ சூட் அணியலாம். ப்ளவுசுடன் கூடி லாங்க் ஸ்கர்ட் துப்பட்டாவுடன் அணியலாம். தோள்பட்டை மற்றும் முழங்கால் தெரியும் வகையிலான ஆடை, இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours