ஆண்டுதோறும் ராமர் கோயிலுக்கு வரவிருக்கிறேன் – நடிகர் ரஜினிகாந்த்!

Spread the love

ஆண்டுதோறும் அயோத்தி வரப் போவதாக ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்ற பின் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதேபோல் மேலும் சில பிரபலங்களும் உணர்வுபூர்வமாக அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு பிரபலங்கள் இன்று அயோத்தி வந்திருந்தனர். பிராண பிரதிஷ்டைக்குப் பிறகு பகவான் ராமரை தரிசித்த அவர்கள், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினர். தனது மனைவி லதாவோடு அயோத்தி வந்திருந்த ரஜினிகாந்த், கோயிலில் இருந்து திரும்பும்போது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி. நான் மிகவும் அதிர்ஷடம் செய்திருக்கிறேன். ஆண்டுதோறும் அயோத்திக்கு நிச்சயம் வருவேன்” என தெரிவித்தார்.

இந்தி நடிகர் விவேக் ஒபராய், “பகவான் ராமர் என்னை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளார். குழந்தை ராமர் விக்ரகம் மிகவும் அழகாக இருக்கிறது. மிகச் சிறப்பாக இந்த சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த சிற்பத்துக்குள் பகவான் ராமர் வந்துவிட்டதாகவே நான் உணர்ந்தேன். நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தேன். ஒவ்வொரு குடும்பத்தையும் ஆசீர்வதிக்குமாறு நான் வேண்டிக்கொண்டேன்” என தெரிவித்தார். நடிகர் சிரஞ்சீவி கூறும்போது, “மிகச் சிறந்த அனுபவம் இது. இந்த நாள் ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமான நாள்” என தெரிவித்தார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, “தனிப்பட்ட முறையில் குழந்தை ராமரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்ததை மிகப் பெரிய அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம்” என தெரிவித்தார். மிகப் பெரிய மகிழ்ச்சியை இந்நிகழ்ச்சி தந்துள்ளது என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா மிகப் பெரிய திருப்தியை அளித்திருப்பதாக வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார். நாளை முதல் பொதுமக்கள் குழந்தை ராமரை தரிசிக்கலாம் என ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை தலைவர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தந்த அனைத்திந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாம் டாக்டர் இமாம் உமர் அகமது இலியாசி, “இது புதிய இந்தியாவின் முகம். நமது மிகப் பெரிய மதம் மனிதநேயமே. எங்களைப் பொறுத்தவரை தேசமே முதன்மையானது” என குறிப்பிட்டார். பாஜக மூத்த தலைவர் ஷானவாஸ் ஹூசேன் கூறும்போது, “இனி இந்த நாட்டில் பிரச்சினை என்று எதுவும் இருக்காது என எண்ணுகிறேன். ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக ஒற்றுமையோடு வாழ வேண்டும். ராமர் நம் அனைவருக்குமானவர்” என தெரிவித்தார்.

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான், “இது ஒரு உணர்ச்சிமிக்க தருணமாக இருந்தது. நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். அதன் காரணமாகவே இங்கு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. ராமர் வந்துவிட்டார். ராம ராஜ்ஜியம் தொடங்கிவிட்டது” என தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours