பயிற்சியில் ஈடுபட்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள். படங்கள்: பிடிஐ
செஞ்சுரியன்: இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் இன்று தொடங்கவுள்ளது. 31 ஆண்டுகளாக இந்திய அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் கிரிக்கெட் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அந்தக் குறையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி போக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தென் ஆப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் போட்டி,டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி கண்டது.இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கவுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த முதலாவது டெஸ்ட் இன்று பிற்பகல் 1.30மணிக்கு தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் தினத்துக்குமறுநாள் நடைபெறும் போட்டி என்பதால் இது ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி என்றே அழைக்கப்படுகிறது.
டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி இம்முறையும் சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கலாம். பேட்டிங்கில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் ஆகியோர் பலம் மிகுந்தவர்களாக உள்ளனர். இவர்கள் தங்களது உயர்மட்டத் திறனை வெளிப்படுத்தும்பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி எளிதாகும்.
அதைப் போலவே பவுலிங்கில் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் எதிரணியை மிரட்டக் காத்திருக்கின்றனர். ஆல்-ரவுண்டர் இடத்துக்கு ரவீந்திர ஜடேஜா தனது பெயரைப் பதிவு செய்துள்ளார். இவர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடும் நிலையில் இந்திய அணி இம்முறை டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்கும்.
அதே நேரத்தில் உள்ளூரில் விளையாடுவதால் தென் ஆப்பிரிக்க அணி பலம் மிகுந்து காணப்படுகிறது. பேட்டிங்கில் கேப்டன் தெம்பா பவுமா, எய்டன் மார்க்ரம், டோனி டே ஜோர்ஸி, டீன் எல்கர், கீகன் பீட்டர்சன், கைல் வீர்ரைன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். பவுலிங்கில் நந்த்ரே பர்கர், மார்க்கோ யான்சன், வியான் முல்டர், ஜெரால்டு கோட்ஸி, கேசவ் மகராஜ்,காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி, டேவிட் பெடிங்ஹாம் ஆகியோர் எதிரணி வீரர்களுக்கு சவால் விட உள்ளனர்.
31 ஆண்டு காலம்: 1992-ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க, இந்திய அணிகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவருகின்றனர். ஆனால் இதுவரை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற்றதில்லை. இம்முறை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இந்தக் குறையை போக்கும் என எதிர்பார்க்கலாம்.
1992-ல் முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்று டெஸ்ட் தொடரில் தோல்வி கண்டது. 1996-ல் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான அணியும், 2001-ல் சவுரவ் கங்குலி தலைமையிலான அணியும், 2006-07-ல் ராகுல் திராவிட் தலைமையிலான அணியும், 2010-11, 2013-14-ல் தோனி தலைமையிலான அணியும் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றன. ஆனால் தொடரை வெல்ல முடியவில்லை.
2018-19, 2021-22-ல் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. ஆனால் தொடரைக் கைப்பற்ற முடியவில்லை.
அணி விவரம்: இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில்,விராட் கோலி, கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர்,ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா, கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்)
தென் ஆப்பிரிக்கா: தெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்ரம், டோனி டே ஜோர்ஸி, டீன் எல்கர், கீகன் பீட்டர்சன், கைல் வீரரைன் (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (விக்கெட் கீப்பர்),நந்த்ரே பர்கர், மார்க்கோ யான்சன், வியான் முல்டர், ஜெரால்டு கோட்ஸி, கேசவ் மகராஜ், காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி, டேவிட் பெடிங்ஹாம்.
செஞ்சுரியனில் எத்தனை வெற்றி? செஞ்சுரியன் மைதானத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மற்ற 2 போட்டிகளில் இந்திய அணி தோல்வி கண்டுள்ளது. நேரம்: பிற்பகல் 1.30 மணி. நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.
‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி என்றால் என்ன…? கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள் தொடங்கும் டெஸ்ட் போட்டி ‘பாக்சிங் டே’ என்று பரவலாக அழைக்கப்படுகிறது.
இன்று தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியன் மைதானத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன. இந்த ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி என்று பெயர் வருவதற்கு பல்வேறு சுவாரஸ்யமான வரலாறுகள் உண்டு.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் கிறிஸ்துவ தேவாலயங்கள் முன் பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். தேவாலயத்துக்கு வருபவர்கள் அதில் தங்களால் முடிந்த பணம் உள்ளிட்டவற்றை நன்கொடையாக செலுத்துவார்கள். மறுநாள் டிசம்பர் 26-ம் தேதி அன்று அந்த பெட்டியைப் பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளிய மக்களுக்கும், வறுமையில் உள்ளவர்களுக்கும் வழங்குவர். இவ்வாறு பெட்டியைத் திறக்கும் நாளைத்தான் அங்கு ‘பாக்சிங் டே’ என்று அழைக்கின்றனர்.
தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் சீசனில் குடும்பத்தினரை பார்க்க செல்லும் போது அவர்களது முதலாளிகள் சிறப்பு பரிசாக கிறிஸ்துமஸ் பாக்ஸ் வழங்கும் பழக்கம் முந்தைய காலங்களில் இருந்தே இருந்து வருகிறது. இதன் அடையாளமாகவும் இந்த ‘பாக்சிங் டே’ பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
எனவே, அன்றைய தினத்தில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளை பாக்சிங் டே போட்டி என்று அழைக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் ‘பாக்சிங் டே’ தினத்தில் ஏதாவது ஒரு விளையாட்டுப் போட்டி கண்டிப்பாக சர்வதேச அளவில் நடைபெறும். இதேபோல் நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் பாக்சிங் டே அன்று ஏதாவது ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறும்.
இன்று தென் ஆப்பிரிக்கா, இந்திய அணிகள் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் மோதுவதைப் போலவே, ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் மோதவுள்ளன.
+ There are no comments
Add yours