வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என டிராவில் முடித்தது நியூஸிலாந்து அணி.
மிர்பூரில் நடைபெற்று வந்த 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 172 ரன்களும், நியூஸிலாந்து 180 ரன்களும் எடுத்தன. 8 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 8 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்தது. மஹ்முதுல் ஹசன் ராய் 2, நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜாகீர் ஹசன் 16, மொமினுல் ஹக் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணியானது 35 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மொமினுல் ஹக் 10, முஸ்பிகுர் ரகிம் 9, ஷஹதத் ஹொசைன் 4, மெஹிதி ஹசன் 3, நூருல் ஹசன் 0, நயீம் ஹசன் 9 ரன்களில் நடையை கட்டினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் சீராக ரன்கள் சேர்த்த தொடக்க வீரரான ஜாகீர் ஹசன் 86 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்த நிலையில் அஜாஸ் படேல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி வீரராக ஷோரிபுல் இஸ்லாம் 8 ரன்களில் நடையை கட்டினார். தைஜூல் இஸ்லாம் 14 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூஸிலாந்து அணி சார்பில் அஜாஸ் படேல் 6, மிட்செல் சாண்ட்னர் 3 விக்கெட்களை வீழ்த்தினர். இவர்கள் கூட்டாக 29 ஓவர்களை வீசினர். டிம் சவுதி 6 ஓவர்களை வீசி ஒரு விக்கெட் கைப்பற்றினார். 137 ரன்கள் இலக்குடன் பேட் செய்த செய்த நியூஸிலாந்து அணி 69 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்துதவித்தது. டேவன் கான்வே 2, கேன் வில்லியம்சன் 11, ஹென்றி நிக்கோல்ஸ் 3, டாம் லேதம் 26, டாம் பிளண்டல் 2, டேரில் மிட்செல் 19 ரன்களில் வெளியேறினர்.
எனினும் 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மிட்செல் சாண்ட்னர், கிளென் பிலிப்ஸுடன் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கிளென் பிலிப்ஸ் 48 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்களும், மிட்செல் சாண்ட்னர் 39 பந்துகளில், 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 35 ரன்களும் சேர்க்க நியூஸிலாந்து அணி 39.4 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-1 என டிராவில் முடித்தது. சில்ஹெட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ஆட்ட நாயகனாக கிளென் பிலிப்ஸும், தொடர் நாயகனாக தைஜூல் இஸ்லாமும் தேர்வானார்கள்.
+ There are no comments
Add yours