இலங்கையை வீழ்த்தி பங்களாதேஷ் த்ரில் வெற்றி!

Spread the love

இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 38ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா – குசால் பெரேரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 4 ரன்கள் எடுத்திருந்த குசால் பெரேரா விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸ் 19 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் நிஷங்காவுடன் இணைந்த சதீரா சமரவிக்ரமா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பதும் நிஷங்கா மற்றும் சதீரா சமரவிக்ரமா இருவரும் தலா 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். இதையடுத்து களமிறங்கிய அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங் செய்வதற்கு கால தாமதம் செய்ததாக கூறி ஐசிசி விதிப்படி கள நடுவர் அவுட் என அறிவித்தார். இதனால் மைதானத்தில் சிறுது நேரம் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன்பின் நடுவரின் முடிவை ஏற்று மேத்யூஸ் பெவிலியன் திரும்பினார்.

அதேசமயம் 5ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய சரித் அசலங்கா ஒரு பக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்த, மறுபக்கம் களமிறங்கிய தனஞ்செயா டி சில்வா 34 ரன்களையும், மஹீஷ் தீக்‌ஷனா 22 ரன்களையும் சேர்த்து தங்களது விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்கா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்தார்.

அதன்பின் 6 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 108 ரன்களை எடுத்திருந்த அசலங்கா ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் தன்ஸிம் ஹசன் ஷாகிப் 3 விக்கெட்டுகளையும், ஷாகிப் அல் ஹசன், ஷொரிஃபுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் – தன்ஸித் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் ஹசன் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து லிட்டன் 23 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த நஜ்முல் ஹொசைன் – கேப்டன் ஷாகிப் அல் ஹசன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னஷிப் அமைத்து அசத்தினர். பின் இருவரும் சதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 90 ரன்களுக்கும், ஷாகிப் அல் ஹசன் 82 ரன்களுக்கும் என ஆடுத்தடுத்து ஏஞ்சலோ மேத்யூஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.

இதனையடுத்து வந்த மஹ்முதுல்லா 22 ரன்களிலும், முஷ்பிக்கூர் ரஹிம் 10 ரன்களிலும், மெஹிதி ஹசன் மிரஸ் 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தாஹித் ஹிரிடோய் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வங்கதேச அணி 41.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours