செஞ்சூரியன்: தென் ஆப்பிரிக்கா அணியுடனான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியின் திலக் வர்மா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசியது.
இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது. திலக் வர்மா 56 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். அவர் பேட்டிங் ஆர்டரில் மூன்றாவது வீரராக களம் கண்டார். தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார். 220 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது.
மார்க்கோ யான்சன் 17 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார். கிளாஸன் 22 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அந்த அணிக்கு அவர் இருவரும் நம்பிக்கை தந்தனர். கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்தில் கோட்ஸி சிங்கிள் எடுத்தார். அடுத்த பந்தில் யான்சன் சிக்ஸர் விளாசினார். மூன்றாவது பந்தில் அவரது விக்கெட்டை அர்ஷ்தீப் கைப்பற்றினார். அதன் எஞ்சியிருந்த மூன்று பந்துகளில் 4, 1, 1 என ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது அந்த அணி. இதன் மூலம் 11 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. தொடரின் நான்காவது மற்றும் கடைசி போட்டி நாளை (நவ.15) நடைபெறுகிறது.
ஆட்ட நாயகன் திலக் வர்மா: “தேசத்துக்காக விளையாட வேண்டுமென்பது எனது கனவு. அணிக்கு தேவையான நேரத்தில் நான் சதம் பதிவு செய்துள்ளேன். எங்கள் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவர் தான் மூன்றாவது இடத்தில் ஆட வாய்ப்பு கொடுத்தார். நான் எனது அடிப்படை ஆட்டத்தை ஆடி இருந்தேன்” என அவர் தெரிவித்தார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்களில் 2-வது பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் அர்ஷ்தீப் சிங். தற்போது மொத்தமாக 92 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். முதல் இடத்தில் 96 விக்கெட்டுகளுடன் சஹல் உள்ளார்.
+ There are no comments
Add yours