இந்தியர்களின் இதயங்களை உடைத்த செய்தி- எடை கூடியதால் ஒலிம்பிக்கிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம்

Spread the love

பாரிஸ்: நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் கூடியதன் காரணத்தால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது ஒலிம்பிக் பதக்கக் கனவுடன் காத்திருந்த ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பேரதிர்ச்சியாக, இதயங்களை நொறுக்கும் சம்பவமாக அமைந்துள்ளது.

முன்னதாக, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். முதல் நிமிடத்திலேயே வினேஷின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் நிலை தடுமாறிய யூஸ்னிலிஸ் எந்த ஸ்கோரும் எடுக்கவில்லை. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்.

தகுதி நீக்கம் ஏன்? 50 கிலோ எடை பிரிவில் போட்டியிடும் வினேஷ் போகத்துக்கு இன்று எடை தகுதி சோதனை செய்தபோது 50 கிலோ மற்றும் 100 கிராம் எடை இருந்தது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் 50 கிலோ எடை பிரிவு பெண்களுக்கான ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் அமெரிக்க வீராங்கனைக்கு தங்க பதக்கம் வழங்கப்படும். போட்டியின்றி அவர் தங்க பதக்கம் பெறுவார். வெள்ளி பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது. வெண்கல பதக்கத்துக்கான போட்டி முறைப்படி நடத்தப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் மல்யுத்த சங்கம் அறிவித்துள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கம் வருத்தம்: வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், “ஒலிம்பிக் பெண்கள் மல்யுத்த போட்டி 50 கிலோ பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இரவு முழுவதும் இந்திய அணியினரின் கடுமையான பிரயத்தனங்களையும் தாண்டி அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் 50 கிலோவையும் தாண்டி எடை கொண்டிருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக இப்போதைக்கு வேறு விவரங்கள் ஏதும் குழுவினரால் தெரிவிக்கப்படாது. வினேஷின் தனியுரிமையை மதிக்க வேண்டுகிறோம். இப்போதைக்கு இனி கையில் உள்ள போட்டிகளில் இந்திய குழு கவனம் செலுத்தும்” என்று தெரிவித்துள்ளது.

விடிய விடிய போராடிய வினேஷ்! முன்னதாக நேற்று அரையிறுதிப் போட்டி முடிவடைந்த பின்னர் வினேஷ் போகத் எடை சோதனை செய்துள்ளார். அப்போது அவரது எடை சற்றே அதிகமாக இருந்ததால் மிகக் கடுமையான பயிற்சிகளை செய்துள்ளார். சைக்கிளிங் உள்பட பல்வேறு பயிற்சிகளையும் விடிய விடிய மேற்கொண்டுள்ளார். பயிற்சியாளர்களும் அவரை உத்வேகப்படுத்தி உடல் எடை குறைப்பு பயிற்சியில் உதவியுள்ளனர். இருப்பினும் இன்று அவருக்கு எடை பரிசோதனை செய்தபோது 50 கிலோவை விட அதிகமாக இருந்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours