டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை- ஜெய்ஷா அதிரடி

Spread the love

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஐசிசி தலைவராக தேர்வாகியுள்ள ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது: டி20 கிரிக்கெட் பார்மெட் அனைவருக்கும் உற்சாகம் தருகின்ற வடிவமாக இருக்கலாம். இருந்தாலும் கிரிக்கெட்டின் அடித்தளமான டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எனது பதவிக்காலத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். எங்கள் முயற்சிகள் மற்றும் பணிகள் அது சார்ந்து இருக்கும்.

உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டின் தரத்தை உயர்த்தும் வகையில் என்னால் முடிந்த அனைத்து பணியையும் செய்வேன். இந்த முக்கிய பொறுப்பில் என் மீது உள்ள எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வேன். 2028-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறவுள்ளது வரலாறாக இருக்கும்.

ஐசிசி-க்கு தலைமை தாங்குவது சிறப்பானது. மகளிர் கிரிக்கெட் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் மேம்பாடு சார்ந்தும் கவனம் செலுத்தப்படும். இதில் அனைவரும் ஒன்றிணைந்து சிறந்த பயணத்தை தொடங்குவோம். இவ்வாறு ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

35 வயதான ஜெய் ஷா, கடந்த 2019-ம் ஆண்டு முதல் பிசிசிஐ செயலாளராக இருந்து வருகிறார். ஐசிசி-யின் தலைவராக தொடர்ச்சியாக இரு முறை பதவி வகித்து வந்த நியூஸிலாந்தைச் சேர்ந்த 62 வயதான கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் 3-வது முறையாக தலைவர் பதவியில் தொடர தனக்கு விருப்பம் இல்லை எனவும், நவம்பர் மாதத்துடன் பதவியில் இருந்து விலகுவதாகவும் கிரேக் பார்க்லே தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, ஐசிசி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் வேட்புமனுக்களை அளிக்கலாம் என்று ஐசிசி நிர்வாகம் அறிவித்தது. வேட்பு மனுக்கள் வழங்குவதற்கான கடைசி நாளான நேற்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை தவிர வேறு யாரும் மனு வழங்கவில்லை. இதையடுத்து அவர், போட்டியின்றி ஐசிசி-யின் தலைவராக தேர்வானார். வரும் டிசம்பர் 1-ம் தேதி ஜெய் ஷா பொறுப்பேற்று கொள்கிறார்.

மறைந்த ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன் மற்றும் ஷஷாங்க் மனோகர் ஆகியோருக்கு பிறகு ஐசிசி தலைவர் பொறுப்பை கவனிக்கும் ஐந்தாவது இந்தியராகி உள்ளார் ஜெய் ஷா.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours