17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் – 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள்.
மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் ஆடிய சுப்மன் கில் தலைமையிலான குஜராத் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கில் 89 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 200 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் ஒரு கட்டத்தில் 70 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த இக்கட்டான சூழலில் களமாடிய பஞ்சாப் வீரர் சஷாங்க் சிங் அதிரடியாக மட்டையைச் சுழற்றி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய அவர் குஜராத்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி அள்ளினார். அவரின் அதிரடியால் பஞ்சாப் 7 விக்கெட்டை மட்டும் இழந்து மீதம் ஒரு பந்து வைத்து வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தது. சஷாங்க் சிங்கிற்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இப்படி தனி ஒருவராக போராடி அணிக்கு வெற்றி தேடித்தந்த சஷாங்க் சிங்கை, ஐ.பி.எல் மினி ஏலத்தின் போது, அவரை தவறாக எடுத்துவிட்டோம். அவர் தங்களுக்கு வேண்டாம் என பஞ்சாப் கிங்ஸ் அணி ஒதுக்கி இருந்தது. ஆனால், அந்த ஒதுக்கி வைக்கப்பட்ட வீரர் தான் பஞ்சாப் கிங்ஸை தலைநிமிரச் செய்திருக்கிறார்.
மினி ஏலத்தின் போது சஷாங்க் சிங் என்ற பெயரில் 19 வயதில் ஒரு வீரரும், 32 வயதில் ஒரு வீரரும் இருந்தனர். பஞ்சாப் அணி 19 வயது சஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுப்பதற்கு பதிலாக தவறுதலாக 32 வயது சஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுத்தது. முதலில் இவரை வேண்டாம் என ஏற்க மறுத்த பஞ்சாப், பின்னர் ‘ஒருவழியாக வீரரை எடுத்துவிட்டோம் எங்களுக்கு இவரின் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது’ என தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்தது. அந்த பதிவிற்கு பதிலளித்த 32 வயதான சஷாங்க், “என் திறமை மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி” என தெரிவித்திருந்தார்.
பின்னணி
சஷாங்க் சிங் 58 உள்நாட்டு டி20 போட்டிகளில் 137.34 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி 754 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் ஆல்ரவுண்டராக அவர் தேசிய அளவில் சத்தீஸ்கர் அணிக்காக விளையாடுகிறார். ஐ.பி.எல் தொடரில் அவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி டேர்டெவில்ஸ் (முன்பு) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளில் இருந்துள்ளார். கடந்தாண்டு இறுதியில் நடந்த மினி ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அவரின் அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours