சிட்னி: எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்கான அணியில் முகமது ஷமி இடம்பெறாதது இந்தியாவுக்கு பெரிய இழப்பு என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் 22 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 7 வரையிலான தேதிகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.
இவர்களுடன் முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது ஆகியோர் மாற்று வீரர்களாக அணியுடன் பயணிக்கின்றனர். இந்த அணியில் அனுபவ பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறுவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர் முழு உடற்தகுதியை பெறாத காரணத்தால் இந்த தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.
“உடற்தகுதியை பெற நான் முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறேன். நாளுக்கு நாள் அது மேம்பட்டு வருகிறது. அதற்கான உழைப்பை கொடுத்து வருகிறேன். என்னை ரசிகர்களும், பிசிசிஐ-யும் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் களம் காண்பேன். உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்” என ஷமி தெரிவித்துள்ளார்.
ஆஸி. பயிற்சியாளர்: “நிச்சயம் இந்திய அணியில் முகமது ஷமி இல்லாதது பெரிய இழப்பு. அவரது லைன் மற்றும் லெந்த் குறித்து எங்கள் பேட்ஸ்மேன்கள் பேசியதை நான் அறிவேன். பும்ராவுக்கு பக்க பலமாக அவர் இருந்தார். அதனால் அவர் அணியில் இல்லாதது பின்னடைவு தான். அதே நேரத்தில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள மற்ற பந்து வீச்சாளர்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.
சென்ற முறை இந்திய அணியின் மாற்று வீரர்கள் இங்கே என்ன செய்தார்கள் என்பதை அனைவரும் அறிவோம். அதே போல ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸை தொடக்க ஆட்டக்காரராக ஆட வைப்பதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. அவர் இதற்கு பொருத்தமாக இருப்பாரா என்பதை ஆஸி. தேர்வுக் குழு தான் முடிவு செய்ய வேண்டும்” என பயிற்சியாளர் மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours