சென்னை: இந்தியா – தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரையும் இந்திய அணி வென்றது. இதைத் தொடர்ந்துஇரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் விளையாடி வருகின்றன.
முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டிருந்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. இந்திய அணி பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது. இந்நிலையில் கடைசி மற்றும் 3-வது ஆட்டம் சேப்பாக்கத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
முதல் ஆட்டத்திலும், மழையால் பாதிக்கப்பட்ட 2-வது ஆட்டத்திலும் இந்திய அணியின் பந்து வீச்சு மோசமாக இருந்தது. பூஜா வஸ்த்ராகர் மட்டுமே இரு ஆட்டங்களிலும் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினார். தீப்தி சர்மா உள்ளிட்ட மற்ற பந்து வீச்சாளர்கள் ரன் குவிப்பை கட்டுப்படுத்தத் தவறினர். ரேணுகா சிங்கிற்கு பதிலாக சேர்க்கப்பட்ட சஞ்ஜனாவும் அதிகர ரன்களை விட்டுக்கொடுத்தது ஏமாற்றமாக இருந்தது. ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றிய போதிலும் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் போனது.
இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை டிரா செய்ய வேண்டுமானால் இந்திய அணி பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பேட்டிங்கை பொறுத்தவரையில் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும்.
தென் ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டு தொடரை வெல்வதில் முனைப்புடன் செயல்படக்கூடும். பேட்டிங்கில் தொடர்ச்சியாக இரு அரை சதங்கள் அடித்துள்ள தஸ்மின் பிரிட்ஸ் மீண்டும் ஒரு முறை இந்திய பந்து வீச்சு துறைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். லாரா வோல்வார்ட், மரிஸான் காப், அன்னேக் போஷ் ஆகியோரும் சவால் அளிக்கக்கூடும்.
+ There are no comments
Add yours