இந்தியாவின் மானத்தை கப்பலேற்றிய ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி.. முதல் டி20 போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி .
ஹராரே: ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்தியகிரிக்கெட் அணி 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் ஹராரே நகரில் இன்று மாலை 4.30 மணிக்கு துவங்கியது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஜிம்பாப்வே தொடரில் அடுத்த தலைமுறை வீரர்கள் களமிறங்கினர்.
டாசில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். இதனை தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி, இந்திய சுழல் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. மளமளவென விக்கெட்டுகள் சரிந்தன. ஒருகட்டத்தில் நூறு ரன்களை எட்டுமாவென இருந்த சூழலில், அந்த அணியின் விக்கெட் கீப்பர் கிளைவ் மாதந்தே 29 ரன்களை சேர்க்க, இருபது ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் தன் பங்கிற்கு இரண்டு பேரை ஆட்டமிழக்க செய்தார்.
116 ரன்கள் என்ற இலக்குடன் ஆட துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அறிமுக வீரர் அபிஷேக் ஷர்மா ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க.. அதன்பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாய் அணிவகுப்பு நடத்தினர். சிறிது நேரம் தாக்கு பிடித்த கேப்டன் கில் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் தனியாளாய் போராடியும் அவரால் வெற்றியின் அருகே செல்ல முடியவில்லை. இறுதியில் இந்திய அணி 102 ரன்களுக்கு ஆட்டமிழந்து , 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி, தனது அடுத்த ஆட்டத்தில் உலக கோப்பைக்கு தகுதி கூட பெறாத ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடைந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்து வருகிறது.
+ There are no comments
Add yours