சென்னை: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 2024 ஜன.1-ம் தேதி முதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய்.2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்கள் நலன் கருதி தமிழக அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடித் திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைபடுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை தமிழக முதல்வர் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2023 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் உடனுக்குடன் தமிழக அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வகையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 2024, ஜன.1 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு பணியாளர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 2024 ஜன.1 முதல் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய்.2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours