ஆயுதபூஜை தினத்தன்று சாமி படம், சிலை வைப்பது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு பா.ஜ.க நிர்வாகி நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி எதிர்வரும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடும் நிகழ்வில் எந்த மதத்தைச் சேர்ந்த சாமி படம், சிலைகள் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனை வார்டு பிரிவுகளில் ஏதேனும் சாமி படம், சிலைகள் இருப்பின் எதிர்கால பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு உடனடியாக அகற்றிவிட அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி, ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நிகழ்வில் இந்து கடவுள்களின் படங்கள் தான் இடம் பெறுமேயன்றி வேறு எந்த மதத்தை சார்ந்த புகைப்படம் பயன்படுத்தப்படும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் ஒவ்வொரு கட்டடமும் பூமி பூஜை செய்தே கட்டப்பட்டவை என்பதை மாவட்ட நிர்வாகம் மறந்து விடக்கூடாது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் இருக்கும் நோயாளிகளும், மருத்துவர்களும் சாமியை கும்பிட்டு விட்டே நலம்பெறுவார்கள் என நம்பிக்கையோடு சிகிச்சை பெறுகின்றனர் அல்லது அளிக்கின்றனர் என்பதை அரசு உணர வேண்டும்.
சாமி படம் இருப்பின் எதிர்கால பிரச்சினைகள் என்ன நேரிடும் என அரசு விளக்க வேண்டும்.
இன்று படங்களையும், சிலைகளையும் அகற்ற சொல்லும் அரசு, பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறிய மற்றும் பெரிய கோவில்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட தைரியம் உள்ளதா?
சிறுபான்மையினரை தாஜா செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு ஓட்டுக்காக இது போன்ற மலிவான செயல்களில் ஈடுபட்டு, மருத்துவர்களின், நோயாளிகளின், பொது மக்களின் நம்பிக்கைகளை அவமதிப்பதை தமிழக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும்.
பல்வேறு அரசு மருத்துவமனைகளில் கிருஸ்துவ மத பிரச்சாரகர்கள் அனைத்து வார்டுகளிலும் சென்று மத பிரச்சாரம் மற்றும் மத மாற்றத்தில் ஈடுபடுவதை என்றேனும் இந்த ஹிந்து விரோத அரசு எதிர்த்துள்ளதா? என்பதை விளக்க வேண்டும்.
அனைத்து மதங்களையும் அரவணைத்து செல்வதே மத சார்பற்ற அரசு என்பதற்கு பொருள்; மாறாக, ஒரு மதத்தை அழிக்க நினைப்பது, வசைபாடுவது என்பது மதவாத அரசாகவே கருதப்படும். இந்த சுற்றறிக்கையினை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய துறையினர் திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours