பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரிகளுக்கு நடைபெற இருந்த ஏலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மீது தாக்குதல் நடத்தியதற்கு அண்ணாமலை அவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அந்த கண்டன பதிவில், பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரிகளுக்கு நடைபெற இருந்த ஏலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி கொடுக்க வந்த பெரம்பலூர் கவுல்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும் பாஜக தொழில்துறை பிரிவு மாவட்டத் துணைத் தலைவருமான கலைச்செல்வன் மற்றும் தொழில்துறை பிரிவு மாவட்டத் தலைவரான முருகேசன் ஆகியோரை திமுக ரவுடி கும்பல் தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திமுகவினரைத் தடுக்க முயற்சித்த, கனிம வளத்துறை துணை இயக்குனர் ஜெயபால் மற்றும் உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் குமரிஆனந்தன் ஆகிய அரசு அதிகாரிகளையும், பாதுகாப்பு பணியிலிருந்த டிஎஸ்பி திரு. பழனிச்சாமி உள்ளிட்ட காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து எச்சரிக்கை விடுத்த பிறகும், திமுக ரவுடி கும்பல் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அங்கிருந்த செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர், அவரது அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்படும் அளவுக்கு ஏற்கனவே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே, அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமைக்கு, திமுகவினர் கொண்டு வந்துள்ளனர்.
திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. மாவட்ட ஆட்சியருக்குக் கூட இந்த ரவுடி கும்பல் கட்டுப்படவில்லை என்றால், சாதாரண பொதுமக்களின் நிலைமையை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. ரவுடிகளை வைத்து ஆட்சி நடத்துவது நீண்ட காலம் நிலைக்காது. பொதுமக்கள் திருப்பி அடித்தால், திமுக ரவுடி கும்பல் முழுவதுமாகக் காணாமல் போக நேரிடும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உணர்ந்திருக்க வேண்டும். உடனடியாக, ஆட்சியர் அலுவலகத்தில் தாக்குதலில் ஈடுபட்ட திமுக ரவுடிகளைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours