வெள்ளத்தில் சிக்கித்தவித்த கர்ப்பிணியை ஹெலிகாப்டரில் மீட்ட விமானப்படையினர், அவரை மதுரைக்கு அழைத்து வந்து மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மிக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அந்த மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் பகுதி கொங்கராய குறிச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அனுசுயா (27) என்ற 9 மாத கர்ப்பிணிப் பெண்ணும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.
அந்தப் பகுதியில் இரண்டு மாடி அளவிற்கு வெள்ளநீர் தேங்கியதால் அனுசுயாவின் உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர். அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் உதவி கோரியும், உதவி கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இதனிடையே அனுசுயாவிற்கு லேசான பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் மேலும் கவலையடைந்தனர். அப்போது, கோவையிலிருந்து அனுப்பப்பட்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வெள்ளப் பகுதிகளில் உணவுப் பொருட்களை விநியோகித்துவிட்டு, இவர்களது வீட்டின் மேல் தாழ்வாக பறந்துள்ளது.
இதனைக்கண்ட அனுசுயாவின் உறவினர்கள் உடனடியாக ஹெலிகாப்டரை நோக்கி உதவி கேட்டு கூக்குரல் எழுப்பி சைகை செய்தனர். இதைக் கண்ட விமானப்படை அதிகாரிகள், தங்களிடம் இருந்த மீட்பு ஸ்டெரச்சர் மூலம் கர்ப்பிணி அனுசுயாவை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஹெலிகாப்டரில் பத்திரமாக ஏற்றினர். இதேபோல், அந்த வீட்டின் மீதிருந்த 16 பேரையும் மீட்டு ஹெலிகாப்டரில் ஏற்றி, மதுரை விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
மதுரை விமான நிலையத்தில் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அனுசுயா மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமானப்படையினரின் இந்த செயலுக்கு அனுசுயாவின் உறவினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
+ There are no comments
Add yours