அதிக கட்டணம் வசூலித்தால் பர்மிட் ரத்து – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Spread the love

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அதிக கட்டண வசூல் தொடர்பாக அடிக்கடி சோதனைகள் நடத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும் அரசாணையை அமல்படுத்தும்படி அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும், அபராதம் மட்டும் விதிக்கப்படுவதாகவும், தனியார் பேருந்து நிறுவனங்கள் தொடர்ந்து, அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

அரசுத் தரப்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபடுவதாகவும், பேருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சோதனையை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர். வெறும் அபராதம் விதிப்பதால் மட்டும் தீர்வு ஏற்படப் போவதில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என கண்காணிக்க அடிக்கடி சோதனைகள் நடத்த வேண்டும் எனவும், தொடர் குற்றத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கான உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதால், உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours