அதிமுக – தேமுதிக நாளை ஒப்பந்தம் கையெழுத்து!

Spread the love

அதிமுக-தேமுதிக இடையே நாளை இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வந்த பாஜகவும், அதிமுகவும் தனித்தனியாக களம் காண்கின்றன. கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணியில் இருந்த கட்சிகளை தற்போது தங்களிடம் இழுப்பதற்கு இரு கட்சிகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் சிறு,சிறு கட்சிகளை இழுப்பதில் பாஜக வெற்றி கண்டுள்ள நிலையில் தேமுதிக மற்றும் பாமகவை ஈர்ப்பதில் அதிமுக வெற்றி கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாமக மற்றும் தேமுதிகவுடன் மறைமுக பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்ட நிலையில் தேமுதிகவுடன் நேரடி பேச்சு வார்த்தையை அதிமுக குழுவினர் தொடங்கியுள்ளனர். முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது. இந்த நிலையில் நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அந்த பேச்சுவார்த்தையின்போது தொகுதிகள் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் வட மாவட்டங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளை தங்களுக்கே வேண்டும் என்று கேட்பதால் இழுபறி நீடித்து வருகிறது. குறிப்பாக கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய தொகுதிகளை இரண்டு கட்சிகளுமே கேட்பதால் எந்த கட்சிக்கு ஒதுக்குவது என்று தெரியாமல் அதிமுக தவித்து வருகிறது.

இந்நிலையில் நாளைய தினம் அதிமுக மற்றும் தேமுதிக இடையே இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினர் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச உள்ளனர். முதல்கட்ட பேச்சு வார்த்தையின்போது கூறிய மூன்று தொகுதிகள் என்பதிலிருந்து நாளை நடைபெற உள்ள பேச்சு வார்த்தையில் அதிமுக தரப்பில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி மற்றும் விருதுநகர் ஆகிய தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ள அதிமுக, கடலூர் மற்றும் திருச்சியை கூடுதலாக ஒதுக்க தயாராக இருக்கிறதாம். தேமுதிகவில் மூத்த தலைவரான சுதீஷ் உடல்நிலையை கருத்தில் கொண்டு தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுவதால் கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்காமல் விட்டு விட தேமுதிக முடிவு செய்துள்ளதாம். அதேபோல மாநிலங்களவை சீட் என்பதை தேர்தலுக்கு பின் பார்த்துக் கொள்ளலாம் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இப்படி இரண்டு கட்சிகளும் இறங்கி வந்துள்ளதால் நாளை நடைபெற உள்ள அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையின் முடிவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours