மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் இன்று நம்பிக்கை அறக்கட்டளை சார்பில் இந்திய அரசியலமைப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார்.
மதுரை: “இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டத்தை காக்கும் கடமை நாம் அனைவருக்கும் உள்ளது” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் இன்று நம்பிக்கை அறக்கட்டளை சார்பில் இந்திய அரசியலமைப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அதில், “நம்பிக்கை அறக்கட்டளை போதைக்கு அடிமையானவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு கொடுக்கும் அறக்கட்டளையாக செயல்படுகிறது. இதில் இந்திய அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பது பெருமையாக உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்திய அரசியலமைப்பு பற்றி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதனை வலியுறுத்தி டிச.23 ல் மாநாடு நடைபெறவுள்ளது. புதிய இந்தியாவை உருவாக்க முடிவு செய்திருக்கும் மத்திய அரசு, சமூகம், கல்வி, பொருளாதாரம், அரசியல் ரீதியாக பிளவுபடுத்துகிறது.
தனி நபருக்கு அவர்கள் நினைத்த மதம், ஜாதியை பின்பற்றலாம். ஆனால் அரசுக்கு சாதி, மதம் இருக்கக்கூடாது. ஒரே மதம் தான் இந்தியாவை ஆள வேண்டும், மற்ற மதங்கள் இந்தியாவில் இருக்கக் கூடாது என்பதுதான் மத்தியில் ஆள்பவர்களின் நோக்கமாக உள்ளது. மாநில உரிமைகளை பறிக்கக் கூடாது. நீட் தேர்வு கொண்டு வரக் கூடாது என பல மாநிலங்கள் மசோதாக்கள் முன்வைப்பதை ஏற்று மத்திய அரசு செயல்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறது. இன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டிய சூழலில் உள்ளோம். அதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இல்லந்தோறும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது” எனக் குறிப்பிட்டார்.
+ There are no comments
Add yours