சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதித்திருந்தனர். இதுகுறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இந்து அறநிலையத் துறை அதிகாரிகளை பணி செய்யவிடவில்லை என்று தீட்சிதர்கள் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சைவத்திரு கோயில்களில் சிறந்து விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் காலை, இரவு பஞ்சமூர்த்கள் வீதியுலா நடைபெற்று வருகிறது. நாளை (டிச.26) தேரோட்ட விழா நடைபெற உள்ளது. மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி உற்சவரராக தேருக்கு செல்வார். நாளை மறுநாள் (டிச.27) முக்கிய திருவிழாவான ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது.
இந்நிலையில், இன்று (டிச.25) முதல் 28-ம் தேதி வரை கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதித்து தீட்சிதர்கள் கனகசபையின் கதவுகளை மூடியுள்ளனர். இந்த நிலையில் நேற்று கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் சந்திரன் தலைமையில் சிதம்பரம் திருக்கோயில்களின் வட்டார ஆய்வாளர் நரசிங்கபெருமாள், தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் கோவிலின் பொது தீட்சிதர்களிடம் அரசாணையின்படி கனகசபையில் பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி பேசினர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற தடை ஆணை பெறப்பட்டுள்ளதாகவும், இந்த நான்கு நாட்கள் மட்டும் பக்தர்களை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
அப்படியானால் நீதிமன்ற தடை ஆணையை கொடுங்கள் என இந்து சமய அறநிலையத் துறையினர் தீட்சீதர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள் வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்க முடியாது எனவும் பக்தர்களை வழக்கம் போல் கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி சென்றனர். இந்த நிலையில், இன்று மாலை சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா, சிதம்பரம் நகர போலீஸில் ஒரு புகார் செய்துள்ளார். அதில், ‘சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அரசாணைப்படி பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்களா என்று கண்காணிப்பு பணியில் நேற்று நானும், இந்து அறநிலையத்துறை சரக ஆய்வாளர் நரசிங்கபெருமாளும் இருந்தோம். மதியம் சில பக்தர்கள் கனகசபையின் படியில் நின்று கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், அரசாணையை நிறைவேற்று முழக்கமிட்டனர்.
நாங்கள் அவர்களிடம் சென்று விசாரித்த போது, தீட்சிதர்கள் இன்று (டிச.25) முதல் 28ம் தேதி வரை பக்தர்களுக்கு கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என்று தெரிவித்தாக கூறினர். இதனை தொடர்ந்து நானும், சரக ஆய்வாளரும் பொது தீட்சிதர்களிடம் இது குறித்து கேட்ட போது நீதிமன்ற ஆணை உள்ளது என்று கூறிய அவர்கள் நீதிமன்ற ஆணையை காட்டவில்லை. மேலும் எங்களது வழக்கறிஞரை கேட்டு சொல்கிறோம் அலட்சியமாக பேசினர். அரசுப் பணி செய்ய விடாமல் எங்களை தடுத்து, மிரட்டும் தோரணையில் பேசிய 5-க்கும் மேற்பட்ட தீட்சிகள்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+ There are no comments
Add yours