கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை நகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பேருந்து முனையத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி திறந்து வைத்தார்.
இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குப் பதிலாக தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையின்போது மட்டும் முன்பதிவு செய்யப்படாத பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்ட நிலையில், தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து போன்றே தனியார் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்திருந்தது. ஆனால் ஆம்னி பேருந்து சார்பில் பொங்கல் பண்டிகை காரணமாக பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்துதான் முன்பதிவு செய்திருக்கின்றனர் என்று தங்களுக்கு மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க விலக்கு கோரப்பட்டது. அதனை ஏற்று ஜனவரி 24 ஆம் தேதி வரை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் வாரம் 4 நாட்கள் தொடர் விடுமுறை வரும் நிலையில், ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்தே இயக்கத் திட்டமிட்டுள்ளனர். கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இட வசதி இல்லை என்றும், பணிகள் முடியவில்லை என்றும் எனவே கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என்றும் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், “கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகள் இயக்க வேண்டும்.
கிளாம்பாக்கத்தில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கும்போது, ஆம்னி பேருந்துகளையும் அங்கிருந்து இயக்குவது தான் சரியாக இருக்கும். அதனால் 24ஆம் தேதிக்குப் பிறகு அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், போக்குவரத்துத்துறையில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பணிச்சுமை அதிகம் உள்ளது என்ற போக்குவரத்து சங்கங்களின் கோரிக்கை உண்மை தான். அதற்காகத்தான் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது.
ஆனால் இன்றே ஓட்டுநர் பணிக்கு ஆட்களை எடுத்துவிடலாம் என்று சிலர் கூறுகின்றனர். தகுதியான நபர்களை தேர்வு செய்ய சில நாட்கள் ஆகும் எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் சிவசங்கர். தொடர்ந்து பேசிய அவர், “போக்குவரத்து ஊழியர்களுக்கு 96 மாதம் அகவிலைப்படி கொடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் அது அவரின் ஆட்சியில் நிறுத்தப்பட்டது என்று ஏன் அவருக்கு தெரியவில்லை? நிதி நிலை காரணமாக பல திட்டங்களை கொண்டு வர முடியவில்லை, அதற்கு காரணம் மத்திய அரசு நமக்கு சேர வேண்டிய நிதியை கொடுக்காமல் இருப்பது தான்” எனத் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours