சேலம்: ஏற்காட்டில் 47-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி 22-ம் தேதி தொடங்கும் நிலையில், பிரம்மாண்டமான காற்றாலை, பவளப்பாறைகள் உள்பட பல மலர்ச் சிற்பங்கள் 7 லட்சம் மலர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது. 5 நாட்கள் நடைபெறும் விழாவில், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
தோட்டக்கலைத் துறை சார்பில் ஏற்காடு அண்ணா பூங்காவில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு இயற்கை வளங்கள் மூலம் மின்சாரம் உருவாக்குவதை எடுத்துரைக்கும் வகையில், பிரமாண்டமான காற்றாலை, சுற்றுச்சூழலில் கடல் வாழ் உயிரினங்களின் பங்கினை உணர்த்தும் வகையில் பவளப்பறைகள், நண்டு, சிற்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை போன்ற மலர்ச்சிற்பங்கள் நிறுவப்படுகின்றன.
மேலும், குழந்தைகளிடம் மரம் நடுதலை ஊக்குவிக்கும் வகையில் கார்ட்டூன் கதாப்பாத்திரங்களான டொனால்டு டக், மிக்கி மவுஸ், டாம் அன்டு ஜெர்ரி மரங்களை நடுவது போலவும், நீர் பாய்ச்சுதல் போலவும் மலர்சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. மேலும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்படுகிறது.
சுற்றுலாத் துறையின் சார்பில் ஏற்காடு படகு இல்லத்தில் 22-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுமக்களுக்கான படகு போட்டி, சமூக நலத்துறை சார்பில் 23-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை அடுப்பிலா சமையல் போட்டி, விளையாட்டுத் துறையின் சார்பில் கால்பந்து போட்டி, பெண்களுக்கான பந்து வீசுதல் போட்டி, 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், நின்று நிலை தாண்டுதல், கயிறு இழுத்தல் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சார்பில் 25-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நாய்கள் கண்காட்சி, சமூக நலத்துறை சார்பில் சார்பில் 26-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை குழந்தைகளின் தளிர் நடை போட்டி நடத்தப்படவுள்ளது.
சுற்றுலாத் துறை மற்றும் கலை பண்பாட்டுத் துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கொம்பு இசை, சிலம்பாட்டம், பறை இசை, மாடு ஆட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, பரத நாட்டிய நிகழ்ச்சி, நாட்டுப்புற பாடல்கள், கரகாட்டம், பப்பட் ஷோ, கிராமிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
ஏற்காடு கோடை விழா மலர்க்காட்சி தொடங்கும் நாளன்று (22-ம் தேதி), காலை 6.30 மணிக்கு மலையேற்றம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் 15 வயது முதல் 45 வயதுள்ளவர்கள் 99658-34650 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours