கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் செல்ல முதலமைச்சர் உத்தரவு!

Spread the love

சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலைஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்து கடலூர், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்ட முதல்வர், கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரனையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனமழை குறித்து கேட்டார்.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு, பொறுப்புஅமைச்சர்கள், சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகள் உடனடியாக சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், முதல்வரின் செயலர் எம்.முருகானந்தம், பேரிடர் மேலாண்மை இயக்குனர் சி.அ.ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சம்பா பயிர்கள் மூழ்கின: நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை இடைவிடாமல் கனமழை பெய்தது. வேளாங்கண்ணியில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த, 25 நாட்களே ஆன இளம் சம்பா பயிர்களில் 30 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின.

இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள புங்கனூர், மருவத்தூர், எடக்குடி, வைத்தீஸ்வரன் கோவில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைநிலங்களில் நீர் தேங்கியுள்ளது. இதனால், 8 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மூழ்கின. மழைநீரை வடிய வைக்கும்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours