கோவையைச் சேர்ந்த ஒருவருக்கு ஒமிக்ரான் ஜேஎன்1.1 திரிபு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 7 மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று, தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. கேரள மாநிலத்தில் நாள்தோறும் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் கொரோன தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. ஜேஎன்1 என்ற திரிபு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் நேற்று 4 பேருக்கு இந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கோவையைச் சேர்ந்த ஒருவரின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக சுகாதாரத்துறையினர் அனுப்பியிருந்தனர். பரிசோதனையில் அவருக்கு ஒமிக்ரான் ஜேஎன்1.1 என்ற திரிபு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டிலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவரின் உடல் நலம் சீராக உள்ளதாகவும், அவர் வெளிமாநிலங்களுக்கு எங்கும் செல்லவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் அவர் வசித்து வரும் பகுதியில் உள்ள மக்களுக்கு பரிசோதனைகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
+ There are no comments
Add yours