சிவகங்கை: சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ், பாஜக வேட்பாளர் தேவநாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி உட்பட 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனினும் காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
மேலும் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை விட இந்த தேர்தலில் 5.65 சதவீத வாக்குகள் குறைந்துள்ளன. அதாவது கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் 15,52,082 வாக்காளர்களில் 10,84,906 பேர் வாக்களித்தனர். ஆனால் இந்த முறை மொத்தம் 16,33,857 வாக்காளர்களில் 10,49,675 பேர் மட்டுமே வாக்களித்தனர். கடந்த 2019-ம் ஆண்டைவிட 81,775 வாக்காளர்கள் அதிகரித்தபோதும், அந்த தேர்தலைவிட 35,231 பேர் குறைவாகவே வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில் புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் வாக்களித்தபோதும், மற்றவர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை.
இதற்கு வெயில், அரசியல்வாதிகள் மீதான வெறுப்பு காரணமாக கூறப்படுகிறது. மேலும் கார்த்தி சிதம்பரம் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் 52.2 சதவீதம் வாக்குகள் பெற்று, 3,32,244 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அடுத்த வந்த பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவுக்கு 2,33,860 வாக்குகளே கிடைத்தன. ஆனால் இந்த தேர்தலில் புதியவர்கள், இளைஞர்கள் அதிகளவில் வாக்களித்ததாலும், வாக்குச் சதவீதம் குறைந்ததாலும், வாக்குகள் 4 வேட்பாளர்களுக்கும் பிரிவதாலும் வெற்றி பெறுபவர் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வெல்ல முடியும் என தெரிகிறது.
இது குறித்து காங்கிரஸார் கூறுகையில் ‘‘திமுக செயல்படுத்திய திட்டங்கள், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் எங்கள் மீதான அதிருப்தி வாக்குகளை பிரியாமல் பார்த்து கொண்டோம். அதிமுக, பாஜக பிரிந்து நிற்பதால், அதிருப்தி வாக்குகளும் பிரிந்துவிடும். ஆனால் அவர்கள் மீதான அதிருப்தி வாக்குகள் எங்களுக்கு மட்டுமே வரும். இதனால் குறைந்தது ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்’’ என்றனர்.
இது குறித்து அதிமுகவினர் கூறுகையில் ‘‘திமுக மற்றும் கார்த்தி சிதம்பரம் மீதான அதிருப்தி வாக்குகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. அதேபோல் சிலர் பிரிந்து சென்றாலும் எங்களது கட்சி வாக்குகள் சதவீதம் எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. பாஜகவை மக்கள் ஏற்கவில்லை. இதனால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலாவது வென்றுவிடுவோம்’’ என்றனர்.
+ There are no comments
Add yours