யானைகள் நடமாட்டத்தால் ஒன்றரை மாதத்துக்கு மேலாகியும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரிக்கு செல்ல விதித்த தடை தொடர்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றே சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும். பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் தொப்பி தூக்கிப் பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாய்ண்ட், அமைதி பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களை பார்க்கலாம். பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் இருக்கும் போது பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்படும். அங்கிருந்து யானைகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்ததும் மீண்டும் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது வழக்கம். ஆனால், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேல் யானைகள் நடமாட்டத்தால் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். வழக்கமான சனி, ஞாயிறு விடுமுறை, டிச.25-ம் தேதி திங்கள் கிழமை கிறிஸ்துமஸ் என 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை மற்றும் தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படும் என்பதால் வரும் நாட்களில் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்நிலையில் பேரிஜம் ஏரிக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடம் எழுந்துள்ளது.
இது குறித்து கொடைக்கானல் வனத்துறையினர் கூறியதாவது: “பேரிஜம் ஏரிப்பகுதியில் யானைகள் முகாமிட்டு உள்ளன. அவ்வப்போது இடம் பெயரும் யானைகள் மீண்டும் பேரிஜம் ஏரி, பள்ளி வாசல் மற்றும் மோயர் சதுக்கம் பகுதிக்கு வந்து விட்டு செல்கின்றன. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியே நீண்ட நாட்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டால் மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்” என்று கூறினர்.
+ There are no comments
Add yours