தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு ஐந்து உறுப்பினர்களை புதிதாக நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தேர்வு செய்யும் பணி : தமிழ்நாட்டில் அரசுத் துறைகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் தேர்வுகளை நடத்தி, பணியாளர்களைத் தேர்வு செய்கிறது. ஆணையத்திற்கு ஒரு தலைவரும் 14 உறுப்பினர்களும் இருக்கலாம்.
புதிய தலைவர் : தேர்வாணையத்தின் தலைவராக 2020ம் ஆண்டில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பொறுப்பேற்றார். இவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 9 ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைவர் நியமிக்கப்படாமல், டிஎன்பிஎஸ்சியின் உறுப்பினராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.முனியநாதன், தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
உறுப்பினர்கள் நியமனம் : இவர் தவிர, தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக பேராசிரியர் கே. ஜோதி சிவஞானம், டாக்டர் கே. அருள்மதி, எம். ஆரோக்கியராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து வந்தனர். ஆகவே ஆணையத்தின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைவர் சி. சைலேந்திரபாபுவை முன்மொழிந்து தமிழக அரசு கோப்புகளை அனுப்பியது. புதிதாக எட்டு உறுப்பினர்களுக்கான பெயர்களும் அந்தக் கோப்பில் இடம்பெற்றிருந்தன. ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. பல்வேறு கேள்விகளை எழுப்பி அவர் கோப்புகளை திருப்பி அனுப்பியிருந்தார். அத்துடன் உறுப்பினர்கள் நியமனம் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் இன்று புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி. சிவனருள், ஐஆர்எஸ் அதிகாரி ஆர்.சரவணகுமார், சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஏ.தவமணி, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த உஷா சுகுமார், கோவை ஸ்ரீநாராயணகுரு மேலாண்மை கல்வி நிறுவன முதல்வர் முனைவர் ஆர்.பிரேம்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு பொறுப்பில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours