தேர்தல் ஆணையம் எங்களுக்கு என்ன சின்னம் கொடுக்கிறதோ, அந்த தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகத்தில், 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தனித் தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் மக்களவைத் தொகுதியும் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி,” மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் உள்ள கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது புதிய கூட்டணி அல்ல. 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் தான் இருந்தது.
அகில இந்தியா அளவில் மற்றும் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் இரு கட்சிகளுக்கும் எதிரான மனநிலை மக்களிடம் உள்ளது. கூட்டணி வெற்றி பெற மக்களின் மன நிலையை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் அதிமுக கூட்டணி உள்ளது. திமுகவின் செயல்பாடுகள் சொல்கின்ற அளவிற்கு இல்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் பூர்த்தி செய்வோம். தேர்தல் ஆணையம் எங்களுக்கு என்ன சின்னம் கொடுக்கிறதோ, அந்த தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம்”என்றார்.
எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நாங்கள் தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம். திண்டுக்கல் தொகுதியில் நாங்கள் போட்டியிட இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிப் பெறும். திமுக அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் மற்றும் மாநில அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் எதிர்த்து அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.
இந்த முறை திண்டுக்கல் தொகுதியில் வலுவான கட்டமைப்பு எங்களுக்கு உள்ளது. சிறுபான்மை மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் தமிழ்நாட்டில் நெருக்கத்தில் உள்ளனர். சிறுபான்மை மக்களுக்கு திமுக அரசு என்ன செய்தது? மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல” என்றார்.
+ There are no comments
Add yours