பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக தங்களை விட்டு விலகிய நிலையில் கடந்த தேர்தலில் தங்களது கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளை ஒன்று சேர்க்கும் முயற்சியில் தமிழ்நாடு பாஜக மும்முரமாக இயங்கி வருகிறது. அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றுள்ள ஓபிஎஸ் அணி, அமமுக, ஆகிய கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளன.
சமத்துவ மக்கள் கட்சி கலைக்கப்பட்டு பாஜகவில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதிகளை பாஜக இறுதி செய்து வருகிறது. பாமகவுக்கு பத்து தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய பேச்சு வார்த்தையில் அமமுகவுக்கு இரண்டு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர ஐஜேகேவுக்கு பெரம்பலூரும், புதிய நீதிக்கட்சிக்கு வேலூரும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று பேச்சு வார்த்தைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் பாஜக அழைத்திருந்தது. இதற்காக கமலாலயத்திற்கு சென்ற ஜி.கே.வாசன் நான்கு தொகுதிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால், பாஜகவோ இரண்டு தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்று உறுதியாக கூறியுள்ளது. இதனையடுத்து பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு ஜி.கே.வாசன் வெளியேறி விட்டார்.
பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றும், ஆனால் ,சுமூகமாக சென்று கொண்டிருப்பதாகவும், நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் வாசன் தெரிவித்துள்ளார். மற்ற கட்சிகள் பாஜக கூட்டணிக்கு வரத் தயங்கிய போது முதல் ஆளாக சென்று கூட்டணியில் இணைத்துக் கொண்டவர் வாசன். ஆனால் அவருக்கு கேட்கும் தொகுதிகளை வழங்க பாஜக தயங்கி வருவதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours