தூத்துக்குடி கனமழை வெள்ளத்தினால் 31 பேர் உயிரிழந்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தகவல்!

Spread the love

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17,18 ஆகிய இரு தினங்களில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் மழை வெள்ளத்தில் மூழ்கி 31 உயிரிழந்தனர். பல வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் இன்று வழங்கப்பட்டது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மழை வெள்ளத்தில் உயிரிழந்த 22 பேர் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கினார்.

மழையினால் வீடு இழந்த 16 பேருக்கு தலா 10,000 நிவாரண உதவித்தொகை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ” கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மின்சார இணைப்பு மாவட்டத்தில் 90 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் முழுமையான இயல்பு வாழ்க்கை திரும்பும்” என்றார்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பில் ஆடு, மாடு, கன்று, கோழி, பன்றி போன்ற உயிரிழப்புகளுக்கு இதுவரை எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பின் படி 1,88 கோடி ரூபாய் தேவை. 200 ஆண்டுகள் இல்லாத அளவு மழை மாவட்டத்தில் பெய்துள்ளது. நாங்கள் களத்தில் இறங்கி பார்வையிட்டு கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மற்றவர்களைப் போல் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொல்லவில்லை.

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மழை வெள்ளப் பாதிப்பை பார்வையிடுகிறார். அவர்களே பார்த்து நிலைமையை மத்திய அரசிடம் சொல்லட்டும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் காந்தி, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours