சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. அண்மையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக நடிகர் விஜயகாந்த்துக்கு இருமல், சளி மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார் என தகவல் வெளியானது. இந்தத் தகவல் பரவிய நிலையில், தேமுதிக தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours