கடலூர்: வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்மழை பெய்வதால் பிரதான வடிகால் மதகுகளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் முழு கொள்ளவு 47.50 அடி ஆகும். இதன் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளாக காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப்குதிகளில் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலம் பாசனம் பெறுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சென்னை குடிநீருக்காக தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான ஜெயங்கொண்டம், அரியலூர், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மழை பெய்து வருவதால் அந்த மழை தண்ணீர் செங்கால் ஓடை மற்றும் பல்வேறு காட்டாறுகள் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இன்று(நவ.26) மாலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உள்ளது. ஏரிக்கு செங்கால் ஓடை மற்றும் காட்டாறுகள் வழியாக விநாடிக்கு 2 ஆயிரத்து 500 கன தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஏரியின் பாதுகாப்பு கருதி பிரதான வடிகால் மதகான வெள்ளியங்கால் ஓடை மதகில் விநாடிக்கு 750 கன அடியும், பூதங்குடி பகுதியில் உள்ள வடிகால் மதகான விஎன்எஸ்எஸ் மதகில் இருந்து விநாடிக்கு 1200 கன அடி தண்ணீரும் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 58 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. விவசாய பாசனத்துக்கு விநாடிக்கு 37 கனஅடி தண்ணீர் பாசன வாய்க்கால்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு தண்ணீர் வருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 9 அடி உள்ள கீழணையில் தற்போது 8.4 அடி தண்ணீர் உள்ளது. இது குறித்து சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் கூறுகையில் ”கடலூர் மாவட்டத்திலும், வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வந்தால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து வெள்ளியங்கால் ஓடை வடிகால் மதகு, விஎன்எஸ்எஸ் வடிகால் மதகு ஆகியவற்றின் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னைக்கும் தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது” என்றார்.
+ There are no comments
Add yours